ஜெய்ப்பூரின் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக மோதி டூங்க்ரி விநாயகர் கோவில் கருதப்படுகிறது. இந்திய அரசின் சுற்றுலா தள தகவலின்படி, இந்தக் கோவில் 1761ஆம் ஆண்டு சேத் ஜெய் ராம் பாலிவால் என்பவரால் கட்டப்பட்டது. ஜெய்ப்பூர் நகரின் மையப்பகுதியில், மோதி டூங்க்ரி மலையின் அடிவாரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.
மோதி டூங்க்ரி என்பதற்கு ‘முத்து மலை’ என்று பொருள். மலை பார்ப்பதற்கு முத்து போன்ற தோற்றம் கொண்டிருப்பதால் இந்தப் பெயர் வந்ததாக ராஜஸ்தான் சுற்றுலாத்துறை குறிப்பிடுகிறது.
பாரம்பரியக் கதை
இந்தக் கோவிலுடன் தொடர்புடைய ஒரு பிரபலமான பாரம்பரியக் கதையும் உள்ளது. மேவார் மன்னர் ஒருவர் நீண்ட பயணத்திற்குப் பிறகு திரும்பி வரும்போது, விநாயகர் சிலையை மாட்டு வண்டியில் எடுத்துச் சென்றதாகவும், அந்த வண்டி எந்த இடத்தில் முதன்முறையாக நின்றதோ, அங்கேயே விநாயகருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று அவர் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த வண்டி மோதி டூங்க்ரி மலையின் அடிவாரத்தில் நின்றதாக நம்பப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே தற்போதைய கோவில் அமைந்ததாக வரலாற்றுக் கதை தெரிவிக்கிறது.