Published : Jul 25, 2025, 05:05 PM ISTUpdated : Jul 25, 2025, 06:15 PM IST
இந்திய ரயில்வே சென்னையில் முதல் ஹைட்ரஜன் ரயில் பெட்டியை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பத்தில் முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்.
இந்திய ரயில்வே, நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிசக்தி மூலம் இயங்கும் ரயில் பெட்டியை சென்னையின் ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலையில் (ICF) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று அறிவித்தார்.
அமைச்சர் தனது சமூக ஊடகமான 'எக்ஸ்' (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், 1,200 குதிரைத்திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயிலை இந்தியா உருவாக்கி வருவதாகவும், இது ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பத்தில் முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். "முதல் ஹைட்ரஜன் ஆற்றல் கொண்ட கோச் சென்னை ஐ.சி.எஃப்-பில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்தியா 1,200 ஹெச்பி ஹைட்ரஜன் ரயிலை உருவாக்கி வருகிறது" என அஸ்வினி வைஷ்ணவ் தனது பதிவில் தெரிவித்தார்.
23
சென்னையில் நடந்த சோதனை வெற்றி
2023ஆம் ஆண்டில், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜ்யசபாவில் தெரிவித்த தகவலின்படி, இந்திய ரயில்வே "பாரம்பரியத்திற்கான ஹைட்ரஜன்" (Hydrogen for Heritage) திட்டத்தின் கீழ் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. ஒரு ரயிலுக்கு தோராயமாக ரூ. 80 கோடி செலவாகும். ஒரு வழித்தடத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய ரூ. 70 கோடி செலவாகும். மலைப்பகுதிகள் உள்பட பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன என அவர் கூறியிருந்தார்.
கூடுதலாக, இந்திய ரயில்வே, தற்போதுள்ள டீசல் எலக்ட்ரிக் ரயில் பெட்டிகளில் ஹைட்ரஜன் எரிபொருள் கலனை பொருத்தும் வகையில் மாற்றியமைப்பதற்கான திட்டத்தையும் ரயில்வே முன்வைத்துள்ளது. அதற்காக ரூ. 111.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வடக்கு ரயில்வேயின் ஜிந்த்-சோனிபட் பிரிவில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
33
ஹைட்ரஜன் ரயிலின் இயக்கச் செலவு
ஹைட்ரஜன் எரிபொருள் அடிப்படையிலான ரயிலின் இயக்கச் செலவு இன்னும் முழுமையாக நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆரம்பத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலின் இயக்கச் செலவு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இது படிப்படியாகக் குறையும். மேலும், எரிசக்தி ஆதாரமாக ஹைட்ரஜனைப் பயன்படுத்துவது, பசுமைப் போக்குவரத்து தொழில்நுட்பத்தை நோக்கிய நகர்வாக இருக்கும். தூய்மையான எரிசக்தியான ஹைட்ரஜன் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்குகளை அடைய உதவும்.
கடந்த ஆண்டு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் இயங்கும் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தைத் தொடங்கிவைத்தார். அந்த நிகழ்வில் பூடான் பிரதமர் திரு. ஷெரிங் டோப்கேவுகேவும் கலந்துகொண்டார்.