மாலத்தீவில் பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவுடனான உறவில் முன்னர் எதிர்ப்புக் காட்டிய அதிபர் முய்சுவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய அத்தியாயம் எனப் பார்க்கப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு மாலத்தீவின் மாலே நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சக கட்டிடத்தில், பிரதமர் மோடியின் பிரமாண்டமான உருவப்படம் மின்னும் விளக்குகளால் ஒளிரவிடப்பட்டது. இது அந்நாட்டின் அதிபர் முகமது முய்சுவின் முந்தைய நிலைப்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிப்பதாக அமைந்தது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தையும் உணர்த்துகிறது.
அதிபர் முய்சு மாலத்தீவில் நடந்த தேர்தலில் இந்தியாவைப் விமர்சிக்கும் India Out என்ற பிரச்சாரத்தின் மூலம்தான் ஆட்சிக்கு வந்தார். இந்தியப் படைகள் மாலத்தீவில் இருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால், இந்தியாவுடனான உறவில் ஒரு பதட்டமான சூழலை உருவாக்கினார். மாலத்தீவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்பவர்கள் முதலில் இந்தியாவுக்கு வருவதே வழக்கம். ஆனால், அந்த வழக்கத்தை மரபை முறியடித்து, துருக்கி மற்றும் சீனாவுக்கு தனது முதல் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.
23
அதிபர் முய்சுவின் நிலைப்பாட்டில் மாற்றம்
ஆனால், தற்போது மாலத்தீவின் பொருளாதார நிலையும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியும் முய்சுவின் அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. மாலத்தீவின் பொருளாதாரமும் சுற்றுலாவும் இந்தியாவின் நிதியுதவியை வெகுவாக சார்ந்துள்ளது. உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் (IMF) மாலத்தீவின் நிதிச் சிக்கல்கள் குறித்து கவலை தெரிவித்தன. அப்போது, இந்தியா மாலத்தீவுக்கு கடன் சலுகைகள், மானியங்கள் போன்ற உதவிகளை வழங்கி நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றியுள்ளது.
பிரதமர் மோடி, இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கும் Neighborhood First கொள்கையின் கீழ், மாலத்தீவுடன் தொடர்ந்து இராஜதந்திர ரீதியிலான தொடர்புகளைப் பேணி வருகிறார். மாலத்தீவின் அதிபர் முய்சுவும், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாலத்தீவில் இந்தியப் படைகளை நிறுத்துவதற்குப் பதிலாக தொழில்நுட்ப வல்லுநர்களை நியமிப்பது போன்ற சமரச முடிவுகள் எடுக்கப்பட்டு, நேரடி மோதல் தவிர்க்கப்பட்டது.
33
இந்தியா - மாலத்தீவு உறவுகள்
இந்தியா, மாலத்தீவின் நம்பகமான மற்றும் நீண்டகால கூட்டாளியாக எப்போதும் இருந்து வந்துள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வித் திட்டங்கள் எனப் பல துறைகளில் இந்தியா கணிசமான உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவிகள், முய்சுவின் அரசாங்கத்திற்கு இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் மாலத்தீவுப் பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒரு புதிய பாதையைத் திறக்கிறது. மாலத்தீவு அதிபர் முய்சுவின் இந்த அணுகுமுறை மாற்றம், இந்தியாவின் பிராந்திய ஆதிக்கம் மற்றும் பொருளாதார வலிமையை எடுத்துக்காட்டுகிறது.