
‘‘நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எனது எதிரிகள்தான் முடிவு செய்கிறார்கள்’’ -இது சீன கம்யூனிஸ்டு தலைவர் மாசேதுங்கின் புகழ்பெற்ற வாக்கியம். ஒரு கதவு மூடப்படும்போது, பல கதவுகள் திறக்கப்படும் என்று சொல்லப்படுவதுண்டு. இது ராஜதந்திரத்திற்கும் பொருந்தும். இப்போது அமெரிக்காவிற்கு எதிர்க்க இந்தியாவுடன் சேர்ந்து சீனாவும் அமைதி வழியை தேர்ந்தெடுத்துள்ளது. தற்போது நடந்துவரும் பனிப்போரில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் அவ்வளவு சுமூகமாக இல்லை. சோவியத் யூனியன் சிதைந்தபோது, இந்தியா முன்பு போலவே ரஷ்யாவுடன் நட்பு பாராட்டி வந்தது. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக, அமெரிக்காவுடனும் நல்லுறவு தொடர்ந்தது. ஆனால், தனது இரண்டாவது பதவிக்காலத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென இந்தியா மீது அலட்சியத்தைக் காட்டத் தொடங்கினார்.
அதே நேரத்தில், கால்வான் பள்ளத்தாக்கு காரணமாக இந்தியாவின் உறவுகள் மிகவும் மோசமடைந்த சீனாவுடனான நட்புக்கு ஒரு புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும், இந்தியா, சீனாவை முழுமையாக நம்புவது சாத்தியமில்லை. ஏனென்றால் பழைய வரலாறுகள் அப்படி..! தற்போதைய சூழலில் இரு நாடுகளுக்குமான நன்மைகள், தீமைகளுக்கு ஏற்ப சீனாவுடன் உறவுகளை மேம்படுத்துவதில் எந்தத் தீங்கும் ஏற்படப்போவதில்லை. ஆனால், இந்தியா-சீனா உறவுகளில் சிறிது மென்மை ஏற்பட்டால்கூட, அமெரிக்காவிற்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாக இருக்கலாம்.
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான சர்ச்சைக்கு மிகப்பெரிய காரணம் இரு நாட்டு எல்லையில் தந்திரத்தால் நிலவும் சந்தேகம். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சீனப் பிரதிநிதி வாங் யீ உடனான இருதரப்பு உரையாடலில், இந்தியாவும், சீனாவும் உறவுகளில் முன்னேற விரும்பினால், எல்லையில் அமைதியை கடைபிடிப்பது மிகவும் முக்கியம் என்று கூறினார். உண்மையான அனுபவங்களின் அடிப்படையில் கூட்டுறவு மனப்பான்மையைக் கடைப்பிடிப்பது பற்றி அவர் வலியுறுத்தினார்.
ஏனென்றால் இரு நாடுகளும் எல்லைப்பிரச்சினை காரணமாக கடினமான காலங்களைக் கடந்துள்ளன. இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில், ஜெய்சங்கர், 'எல்லைப் பிரச்சினைகள் குறித்த விவாதம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நமது உறவில் எந்தவொரு நேர்மறையான உத்வேகத்திற்கும் அடிப்படையானது எல்லைப் பகுதிகளில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஒன்றாகப் பேணுவதற்கான நமது திறமையாகும். இதற்கு இரு தரப்பில் இருந்தும் தெளிவான, ஆக்கபூர்வமான அணுகுமுறை தேவை' என்று ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார். இந்த முயற்சியில், நாம் மூன்று பரஸ்பர கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் - பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன், பரஸ்பர ஆர்வம். நமக்குள்ளான வேறுபாடுகள், சர்ச்சை, போட்டிகள் மோதலாக மாறக்கூடாது’’ என வலியுறுத்தினார்.
இதற்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஜெய்சங்கருக்கு அளித்த பதிலில், ‘‘இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பராமரித்து வருகிறது. வெளிப்புற குறுக்கீடுகளைச் சமாளிக்கவும், பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இருதரப்பு உறவுகளில் தொடர்ந்து முன்னேற்றத்தை வலுப்படுத்தவும் இரு நாடுகளும் நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டது.
எல்லைப் பகுதிகளில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பராமரித்து, ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள மவுண்ட் கேங் ரென்போச்சே, மாபம் யுன் த்சோவுக்கு இந்திய யாத்திரையை மீண்டும் தொடங்கினோம். குறுக்கீடுகளைச் சமாளிக்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும், சீன-இந்திய உறவுகளின் முன்னேற்றத்தில், வளர்ச்சியின் வேகத்தை மேலும் வலுப்படுத்தவும் நாங்கள் நம்பிக்கை தெரிவித்தோம். இதனால் நமது சொந்த முன்னேற்றத்துடன், ஒருவருக்கொருவர் வெற்றிக்கு பங்களிக்கவும், ஆசியாவிற்கும், உலகிற்கும் மிகவும் தேவையான உறுதியை வழங்கவும் முடியும்’’ என்றார்.
பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டிற்காக சீனாவுக்குச் செல்வதற்கு முன்பு, வாங் யி இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா, ரஷ்யா , சீனாவைத் தவிர, இந்த அமைப்பில் மத்திய ஆசியாவின் பல நாடுகளும் உள்ளன. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறோம் என்ற பெயரில் அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்து சீனாவுடன் பேரம் பேசுவதில் ஈடுபட்டுள்ளது. இந்த நேரத்தில், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான பரஸ்பர உறவுகளில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகள் இந்தியாவும், சீனாவும். அமெரிக்காவிற்குப் பிறகு உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் சீனா, அதில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரமாகும்.
வரி பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டை சீனா முதல் நாளிலிருந்தே ஆதரித்து வருகிறது. எல்லை தொடர்பான ஒரே சர்ச்சைக்குரிய பிரச்சினையை ஒதுக்கி வைத்துவிட்டு, முக்கிய ரீதியாக முன்னேற இரு நாடுகளும் முயற்சித்தால், அது அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை மணிதான். ஏனென்றால், இரு நாடுகளும் புவிசார் அரசியலில் பிராந்திய ஒற்றுமையை நிலைநாட்டினால், தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தின் பிரச்சினைகள் வேகமாக அதிகரிக்கும்.