லக்னோவை மையமாகக் கொண்ட PTC இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை அமைப்புகளை உருவாக்குவதற்கு அவசியமான டைட்டானியம் மற்றும் சூப்பர் அலாய்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை செயலிழக்கச் செய்த பிரம்மோஸ் ஏவுகணைக்கு இந்த பொருட்கள் மிக முக்கியமானவை.
இந்த அதிநவீன டைட்டானியத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைவதற்கு முன்பு, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே இந்த முக்கிய உற்பத்தித் திறனைப் பெற்றிருந்தன.
இதுபற்றி PTC தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சச்சின் அகர்வால் கூறுகையில், "போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள் கட்டுவதற்கு டைட்டானியம் மற்றும் சூப்பர் அலாய்ஸ் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்த திறன்களும் தொழில்நுட்பங்களும் இதற்கு முன் எங்களிடம் இல்லை, வெளிநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இப்போது எங்களிடமும் திறன்களும் தொழில்நுட்பங்களும் உள்ளன." என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சீனா அரிதான கனிமப் பொருட்களின் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்து இந்தியாவை மிரட்டியதை சுட்டிக்காட்டிய அவர், "முக்கியமான உற்பத்திக் கூறுகள் மற்றும் தொழில்நுட்பங்களில் உள்ள இடைவெளியைக் குறைப்பதே எங்கள் நோக்கம். இதனால் வேறு எந்த நாடும் இந்தியாவை மிரட்ட முடியாது" என்று கூறினார். டைட்டானியம் மற்றும் சூப்பர் அலாய்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரே தனியார் துறை நிறுவனம் PTC இண்டஸ்ட்ரீஸ் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.