இந்த விவகாரத்தைக் கிளப்பிய முன்னாள் துப்புரவுப் பணியாளர், 1995 முதல் 2014 வரை தாம் பல உடல்களை புதைத்ததாகக் கூறி, 15 இடங்களை அடையாளம் காட்டினார். இதில் முதல் 8 இடங்கள் நேத்ராவதி ஆற்றின் கரையிலும், 9 முதல் 12 இடங்கள் நெடுஞ்சாலைக்கு அருகிலும், 13வது இடம் நேத்ராவதி-அஜுகுரி சாலையிலும், கடைசி இரண்டு இடங்கள் கன்யாடி பகுதியிலும் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு எச்சங்களில் ஒன்று ஆணுடையது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த தடயவியல் பரிசோதனை தேவைப்படும். மொத்தமாக 15 எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றில் சில உடைந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், மண்டை ஓடு கண்டெடுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக தோண்டப்பட்ட முதல் ஐந்து இடங்களில் எந்தவிதமான தடயங்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.