இந்திய விமானப்படை தனது வலிமையை அதிகரிக்க மேலும் 40 ரஃபேல் போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மாத இறுதியில் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்திய வருகையின் போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய படைப்பிரிவுகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், எதிர்காலத்தில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இருமுனைப் போர் ஏற்பட்டால் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தெற்காசியாவில் இந்தியாவின் ராணுவ வலிமையை உயர்த்தக்கூடிய வகையில், இந்திய விமானப்படை (IAF) பிரான்சிடமிருந்து மேலும் 40 ரஃபேல் போர் விமானங்களைக் வாங்குவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மாத இறுதியில் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னுவின் இந்திய வருகையின்போது இரு நாடுகளுக்கும் இடையே இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனக் கூறப்படுகிறது.
இந்திய விமானப்படையின் வழிகாட்டுதல்களின்படி, செயல்பாட்டுத் தயார்நிலையைப் பராமரிக்க, 42.5 படைப்பிரிவுகள் இருக்க வேண்டும். இப்போது 31 படைப்பிரிவுகள்தான் உள்ளன. எதிர்காலத்தில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இருமுனைப் போர் ஏற்பட்டால் வான்வழி பாதுகாப்பைப் பராமரிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், விமானப்படையின் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், இந்திய விமானப்படையில் தயார் நிலையில் உள்ள போர் விமானங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். 21வது சுப்ரதோ முகர்ஜி கருத்தரங்கில் பேசியபோது, விமானப்படையால் இயக்கப்படும் விமானங்களின் பற்றாக்குறையை ஈடுசெய்ய ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 35-40 புதிய போர் விமானங்களைப் புதிதாக வாங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு அண்டை நாடுகளால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்து விமானப்படைத் தலைவர் கவலை தெரிவித்தார். 2016ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப் படையில் தேஜாஸ் ஜெட் விமானங்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால் 2024ஆம் ஆண்டுகூட முன்னர் ஆர்டர் செய்யப்பட்ட 40 விமானங்களை விமானப்படை இன்னும் பெறவில்லை என்று அவர் கூறினார்.
34
Indian Air Force (IAF)
அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) 2030ஆம் ஆண்டுக்குள் 97 தேஜாஸ் Mk-1A ஜெட் விமானங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் உற்பத்தியில் தாமதம் காரணமாக நிர்ணயித்த காலக்கெடுவுக்கு அத்தனை விமானங்களை வழங்குவது சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.
மல்டி ரோல் போர் விமானங்கள் (MRFA) திட்டத்தின் கீழ், 114 போர் ஜெட் விமானங்களை வாங்கவும் விமானப்படை திட்டமிட்டுள்ளது, ஆனால் இதுவரை அரசு தரப்பில் இது தொடர்பாக எந்த டெண்டரும் வெளியிடப்படவில்லை. முன்மொழிவுக்கான கோரிக்கையும் வெளியாகவில்லை.
44
Rafale fighter jets
இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு இந்திய விமானப்படையின் உடனடித் தேவைகளைக் கருத்தில்கொண்டு, ரஃபேல் போர் விமானங்களைத் தயாரிக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் மற்றொரு ஒப்பந்தம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் புதிதாக 40 ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து இந்தியா மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளுக்கு இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஹெலிகாப்டர்களுக்கு சஃப்ரான் எரிபொருளை வாங்குவதற்கும், இந்திய விமானப்படைக்கு இரண்டாவது தொகுதி ரஃபேல் போர் விமானங்களை வழங்குவதற்கும் பேச்சுவார்த்தைகள் நடந்தாக மூத்த அதிகாரி கூறியதாக ஒருவர் கூறியிருக்கிறார்.