தொழில் அதிபர் கவுதம் அதானியின் மகன் ஜீத் அதானியின் திருமணம் மிகவும் எளிய முறையில் நடந்து முடிந்துள்ளது. மகன் திருமணத்தில் ஆடம்பரத்தை தவிர்த்த கவுதம் அதானி ரூ.10,000 கோடி தானமாக வழங்கியுள்ளார்.
மகன் திருமணத்தில் ஆடம்பரம் தவிர்ப்பு; மக்களுக்காக ரூ.10,000 கோடியை அள்ளிக்கொடுத்த கவுதம் அதானி!
அதானி குழும தலைவரும், இந்தியாவின் முன்னணி தொழில் அதிபருமான கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானிக்கும், சூரத் வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஷாவுக்கும் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாரம்பரிய முறைப்படி நடந்த திருமண விழா மிக எளிமையாக நடத்தப்பட்டுள்ளது.
ஜெயின் மற்றும் குஜராத்தி கலாச்சாரத்தின் படி திருமண சடங்குகள் நடந்தன. இந்த திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிக முக்கியமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழா பல ஆயிரம் கோடிகள் செலவில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்திய, வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், அனைத்து சினிமா, விளையாட்டு பிரபலங்கள் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர்.
24
கவுதம் அதானி மகன் திருமணம்
இதேபோல் கவுதம் அதானி மகனின் திருமண விழாவும் ஆடம்பரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமணத்தை மிக எளிய முறையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் கவுதம் அதானி. இந்நிலையில், மகனின் திருமண விழாவில் ஆடம்பரத்தை தவிர்த்த கவுதம் அதானி, ரூ.10,000 கோடி தானமாக வழங்கி அசத்தி இருக்கிறார்.
அதாவது சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக ரூ.10,000 கோடியை நன்கொடையாக கவுதம் அதானி வழங்கியுள்ளார். அவரது நன்கொடையின் பெரும்பகுதி சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக செலவிடப்பட உள்ளது. அதானி குழுமத்தால் நன்கொடையாக வழங்கப்படும் இந்த பணம் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் மலிவு விலையில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்காக செலவிடப்படும்.
இது தவிர, மலிவு விலையில் உயர்மட்ட K-12 பள்ளிகள் மற்றும் வேலைவாய்ப்புடன் மேம்பட்ட உலகளாவிய திறன் அகாடமிகளின் வலையமைப்பை அணுகுவதில் கவனம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி மற்றும் திவா ஷா திருமணத்திற்கு முன்பு 'மங்கல் சங்கல்ப்' எடுத்துக் கொண்டனர். இதன் கீழ் 500 பெண்களின் திருமணத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். அதாவது ஜீத் அதானி-திவா ஷா தம்பதியினர் ஒவ்வொரு ஆண்டும் 500 பெண்களின் திருமணத்திற்காக ரூ.10 லட்சம் வழங்க இருக்கின்றனர்.
44
கவுதம் அதானி ரூ.10,000 கோடி நன்கொடை
''ஒரு தந்தையாக, அவர்கள் செய்யும் இந்த மங்கள சேவையில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். இந்த முயற்சியால், பல திருமணமாகாத பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கை மகிழ்ச்சி, அமைதி மற்றும் மரியாதையுடன் முன்னேறும் என்று நான் நம்புகிறேன். ஜீத் மற்றும் திவாவை ஆசீர்வதித்து, இந்த சேவைப் பாதையில் தொடர்ந்து முன்னேற அவர்களுக்கு பலம் அளிக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்'' என்று கவுதம் அதானி பெருமைபட தெரிவித்தார். அதானியின் இந்த செயலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.