பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்க இந்திய ரயில்வே எப்போதும் முயற்சி செய்து வருகிறது. பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்யும் போது எந்த பிரச்சனையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக இந்திய ரயில்வே பல சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.
ரயிலில் பயணம் செய்யும்போது, இரவு நேரத்தில் இறங்கும் ஸ்டேஷன் வருகிறது என்றால், எப்போது ஸ்டேஷன் வரும் எனக் காத்திருந்து, இரவு முழுவதும் விழித்திருப்பார்கள்.
இத்தகைய பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வே ஒரு ஏற்பாடு செய்துள்ளது. ரயில்வே விதிகளின்படி, இரவில் இறங்க வேண்டிய பயணிகளை, ஸ்டேஷன் வருவதற்கு முன் எழுப்புவதும் டிக்கெட் பரிசோதகரின் பொறுப்பாகும்.
ரயில்வே ஊழியர்கள் இந்த விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மீறினால் ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். இந்த விதி ஏசி பயணிகளுக்கு மட்டும் பொருந்தும்.
ஆனால், முன்பதிவு அல்லாத மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு இந்த வசதி கிடையாது. ராஜ்தானி, தேஜாஸ், துரந்தோ அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி கோச்சில் பயணிப்பவர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.
இந்த ரயில்களில், ஏசி பெட்டிகளில் உள்ள பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணிக்குள் இறங்கவேண்டியது இருந்தால், 15 நிமிடங்களுக்கு முன் அவர்களை எழுப்ப வேண்டிய பொறுப்பு டிக்கெட் பரிசோதகரிடம் உள்ளது. இந்திய ரயில்வே இதற்காக ஒவ்வொரு டிக்கெட் பரிசோதகருக்கும் 'வேக் அப்' மெமோவை வழங்குகிறது.
டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை சரிபார்க்கும்போதே பயணிகள் எந்த நேரத்தில் எந்த நிலையத்தில் இறங்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வார். அதன்படி, மெமோவில் பயணிகளின் பெயர் மற்றும் இருக்கை எண்ணை எழுதுவார்.
பயணிகள் இறங்க வேண்டிய இடம் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் தனது உதவியாளரை அனுப்பி, பயணிகளிடம் வரவிருக்கும் ரயில் நிலையம் பற்றித் தெரிவிக்க வேண்டும். இதில் யாராவது அலட்சியம் காட்டினால், அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.