Shubhanshu Shukla Receives Warm Welcome On His Return To India
இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டிய விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று வெற்றிகரமாக இந்தியா திரும்பியுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் சுபான்ஷு சுக்லாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
24
இந்தியா திரும்பிய விண்வெளி நாயகன்
சுபான்ஷு சுக்லாவுக்கு அவரது மனைவி காம்னா சுக்லா மற்றும் மகனும் வரவேற்பு அளித்தனர். மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், சுபான்ஷு சுக்லாவை வரவேற்று ஒரு வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''இது இந்தியாவிற்கு பெருமைமிக்க தருணம். இஸ்ரோவிற்கு பெருமைமிக்க தருணம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இதை சாத்தியமாக்கிய அரசுக்கு நன்றி. இந்தியாவின் விண்வெளிப் பெருமை இப்போது இந்திய மண்ணில் உள்ளது. பாரத மாதாவின் மகன், விண்வெளி வீரர் சுபாஷு சுக்லா இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார்'' என்று கூறியுள்ளார்.
34
பிரதமர் மோடியை சந்திக்கும் சுபான்ஷு சுக்லா
சுபான்ஷு சுக்லாவுடன் குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரும் வந்துள்ளதாக ஜிதேந்திர சிங் தெரிவித்தார். பாலகிருஷ்ண நாயர் இந்தியாவின் முதல் மனிதப் பயணமான 'ககன்யான்' திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுபான்ஷு சுக்லா பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும், ஆகஸ்ட் 23 அன்று நடைபெறும் தேசிய விண்வெளி தின நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விண்வெளியில் ஆய்வு நடத்திய சுபான்ஷு சுக்லா
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, 'ஆக்சியம் -4' திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் நாசா மற்றும் இஸ்ரோவின் ஆதரவுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்றார். அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் ஜூன் 26 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த அவர் 18 நாட்கள் தங்கி, விண்வெளியின் நுண் ஈர்ப்பு விசை சூழலில் இஸ்ரோவால் அளிக்கப்பட்ட ஏழு முக்கியமான ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டார்.
அதாவது விண்வெளியில் திசுக்களின் வளர்ச்சி மற்றும் மறுஉருவாக்கம் குறித்த ஆய்வுகள், விண்வெளியில் கதிரியக்கத்தால் மனித உடலில் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வுகளை அவர் நடத்தினார். தனது விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு ஜூலை 15 அன்று, 'டிராகன் கிரேஸ்' விண்கலம் மூலம் சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பினார்.
1984ம் ஆண்டு ராகேஷ் சர்மாவின் பயணத்திற்குப் பிறகு, விண்வெளிக்கு சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.