இன்றைய கால கட்டத்தில் கையில் ஸ்மார்ட் போனை வைத்துக் கொண்டு சீக்கிரமாக பிரபலமாவதற்கு பொதுமக்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக
ரீல்ஸ் மோகம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. சோஷியல் மீடியாவில் வீடியோவுக்கு அதிக லைக்ஸ்கள் அள்ள வேண்டும் என்பதற்காக ஆபத்தான ரீல்ஸ்களை செய்து சிக்கலில் சிக்குவதும் உயிரிழப்பு சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக வேகமாக வந்து கொண்டிருக்கும் ரயிலுக்கு மத்தியில், தண்டவாளத்தில் ரீல்ஸ் எடுத்து உயிரை விடும் சம்பவங்களும் நிகழ்கின்றன.
அதேபோல் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டத்தில் உள்ள கனக்புரா மற்றும் தனக்யா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் மஹிந்திரா தார் எஸ்யூவியை வேகமாக ஓட்டுகிறார். அதே சமயம் சரக்கு ரயில் ஒன்று எதிரே வருகிறது. இதற்கிடையில் தண்டவாளத்தின் நடுவில் தார் சிக்கிக்கொண்டது. எனினும், லோகோ பைலட் சரியான நேரத்தில் காரைப் பார்த்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டிய நபரை கைது செய்தனர்.
இதை தடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ரீல் தயாரிப்பாளர்களுக்கு எதிராக ரயில்வே துறை அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது. இதுதொடர்பாக அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: மக்கள் ரீல் எடுப்பதற்காக எல்லையை மீறி வருகின்றனர். அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பது மட்டுமல்லாமல், ரயில் பாதைகளில் பொருட்களை வைப்பதன் மூலமோ அல்லது வாகனங்களை இயக்குவதன் மூலமோ அல்லது ஓடும் ரயில்களில் உயிருக்கு ஆபத்தான சாகசங்களைச் செய்வதன் மூலமோ நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளின் பாதுகாப்பையும் பாதிக்கின்றனர்.
செல்பி எடுக்கும் போது ரயில்கள் மோதி மக்கள் உயிரிழப்பதை வைரலான வீடியோக்கள் காட்டுகின்றன. இனிமேல் விதிமுறைகளை மீறும் ரீல் படைப்பாளர்கள் மீது எந்தவித கருணையும் காட்டவேண்டாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.