உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள ஓஎன்ஜிசி சவுக் பகுதியில் இன்னோவா கார் ஒன்று 100 கிலோ மீட்டர் வேகத்தில் சிறி பாய்ந்து வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் கார் அதிகவேக மோதியுள்ளது. இதனால் கார் அப்பளம் நொறுங்கியது மட்டுமல்லாமல் மேற்கூரை பெயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் லாரியின் அடியில் சிக்கி இருந்த இன்னோவா காரை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு கிரேன் மூலம் காரை வெளியே எடுத்தனர்.
படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படட்டது.
இதில், விபத்தில் உயிரிழந்தவர்கள் 5 பேர் டேராடூனையும், ஒருவர் சம்பாவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. குணீத் சிங் (19), காமக்ஷி சிங்கால் (20), நவ்யா கோயல் (23), ரிஷப் ஜெயின் (24), அதுல் அகர்வால் (24) மற்றும் ஹிமாச்சலின் சம்பாவைச் சேர்ந்த குணால் குக்ரேஜா (23) ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.