பெங்களூரின் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, நெரிசல் மிகுந்த சாலைகளில் தனியாக காரில் பயணிப்பவர்களுக்கு 'நெரிசல் வரி' விதிக்க கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பெங்களூரில் தனியாக காரில் சென்றால் நெரிசல் வரி விதிப்பு திட்டம்!
பெங்களூர் மாநகரம் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி மையமாக இருந்தாலும், போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த கர்நாடக அரசு புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது. அதன்படி, மிக அதிக நெரிசல் காணப்படும் சாலைகளில் தனி ஒருவராக காரில் பயணிப்பவர்களுக்கு நெரிசல் வரி விதிக்கப்படலாம்.
24
பொதுப் போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லை
சென்னையில் பல்வேறு சாலைகளில் ஒரே ஒருவரே காரில் பயணிப்பதைப் போலவே, பெங்களூரிலும் அதிகமானோர் தனிப்பட்ட கார்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால், பெங்களூரில் சென்னையைப் போல மாற்றுப்பாதைகள் அல்லது பரவலான பொதுப் போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லை. இதனால் சிறிய கோளாறு ஏற்பட்டாலோ, மழை பெய்தாலோ நகரம் முழுவதும் முடங்கி விடுகிறது.
34
நெரிசலை குறைக்க புதிய ஐடியா
சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநில தலைமைச் செயலாளர், ஐடி நிறுவன தலைவர்கள் மற்றும் நகர வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது ORR (Outer Ring Road) மற்றும் பிற முக்கிய நெரிசல் சாலைகளில் தனியாக காரில் பயணிப்பவர்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த வரி மூலம் கார்களின் எண்ணிக்கை குறைந்து, பொதுப் போக்குவரத்தை மக்கள் நாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. போதுமான பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் வரி விதிப்பது அநீதி என தொழில் அதிபர்கள் விமர்சிக்கின்றனர். தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கினால் மட்டுமே நெரிசல் குறையும் என்றும் கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன. பெங்களூரின் மிகப்பெரிய போக்குவரத்து சிக்கலை சமாளிக்க இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது காத்திருக்க வேண்டிய கேள்வியாக உள்ளது.