
பாதிக்கப்பட்ட நாடாக காட்டிக்கொள்ள செயல்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸை இந்தியா தடுத்து நிறுத்தி, ஐ.நா.வில் பயங்கரவாதம் குறித்து அம்பலப்படுத்தியது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஐக்கிய நாடுகள் சபையில் அப்பட்டமாக பொய் சொன்னார். ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றதாகக் கூறினார். இது இந்தியாவுக்கு ஆத்திரத்தை தூண்டி சரியான பதிலடி கொடுக்கத் தூண்டியது. ஷெரீப்பின் உரை குறித்து பேசிய இந்திய தூதர் பெட்டல் கெலாட், "இன்று காலை, கூட்டம் பாகிஸ்தான் பிரதமரின் ஒரு அபத்தமான நாடகத்தைக் கண்டது. அவர் தனது வெளியுறவுக் கொள்கையின் மையப் பகுதியாக இருக்கும் பயங்கரவாதத்தை மீண்டும் ஒருமுறை பெருமைப் படுத்தி உள்ளார்" என்றார்.
மேலும் அவர், ‘‘எப்படி இருந்தாலும், இவ்வளவு நாடகங்களாலும், பொய்களாலும் உண்மைகளை மறைக்க முடியாது. இதே பாகிஸ்தான்தான், ஏப்ரல் 25, 2025 அன்று, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை, இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை கொடூரமாக படுகொலை செய்ததற்கான பொறுப்பில் இருந்து பாதுகாத்தது. பயங்கரவாதத்தைப் பரப்பி ஏற்றுமதி செய்யும் பாரம்பரியத்தில் நீண்ட காலமாக மூழ்கியுள்ள ஒரு நாடு, இந்த நோக்கத்திற்காக மிகவும் அபத்தமான கதைகளை இட்டுக்கட்டுவதில் வெட்கப்படுவதில்லை.
பாகிஸ்தான் பத்தாண்டு காலமாக ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே நேரத்தில் பாகிஸ்தான் அமைச்சர்கள், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பங்காளிகளாக நடித்து, பல ஆண்டுகளாக பயங்கரவாத முகாம்களை நடத்தி வருவதாக சமீபத்தில் ஒப்புக்கொண்டனர். இந்த பாசாங்குத்தனம் மீண்டும் ஒருமுறை நீடித்திருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த முறை பிரதமர் மட்டத்தில் பாசாங்கு தனம் வெளிப்பட்டுள்ளது.
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளைப் பேசுகிறது என்று இந்தியா கூறியது. ஆபரேஷன் சிந்தூரின் போது பஹாவல்பூர், முரிட்கேவில் உள்ள பயங்கரவாத தளங்களில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் ஏராளமான புகைப்படங்களைக் கண்டோம். பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இதுபோன்ற மோசமான பயங்கரவாதிகளை வெளிப்படையாகப் புகழ்ந்து அஞ்சலி செலுத்துகின்றனர். இந்தியாவுடனான சமீபத்திய மோதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஒரு வினோதமான பதிலை சொல்லியுள்ளார். இந்த விஷயத்தில் பதிவு தெளிவாக உள்ளது.
மே 9 ஆம் தேதி வரை இந்தியா மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் மிரட்டி வந்தது. ஆனால் மே 10 ஆம் தேதி, பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக பகைமையை நிறுத்துமாறு எங்களிடம் வேண்டுகோள் விடுத்தது. பல பாகிஸ்தான் விமான தளங்கள் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டது. அந்த சேதத்தின் படங்கள் நன்கு அறியப்பட்டவை. அது பொதுவில் கிடைக்கின்றன. அழிக்கப்பட்ட ஓடுபாதைகள், எரிந்த ஹேங்கர்கள் வெற்றியின் அடையாளமாக இருந்தால், பிரதமர் ஷெரீப் அவற்றை அனுபவிக்க முடியும். உண்மை என்னவென்றால், கடந்த காலங்களைப் போலவே, இந்தியாவில் அப்பாவி பொதுமக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தானும் பொறுப்பாகும். எங்கள் மக்களைப் பாதுகாக்கும் எங்கள் உரிமையை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்.
பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுடன் அமைதி பற்றிப் பேசியுள்ளார். அவர் உண்மையிலேயே மனசாட்சி உள்ளவராக இருந்தால், எங்கள் பாதை தெளிவாக உள்ளது. பாகிஸ்தான் உடனடியாக அனைத்து பயங்கரவாத முகாம்களையும் மூடிவிட்டு, இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும். வெறுப்பு, வெறி, சகிப்புத்தன்மையற்ற தன்மையைக் கடைப்பிடிக்கும் ஒரு நாடு, நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் இந்தக் கூட்டத்திற்குப் பிரசங்கிப்பதும் முரண்பாடானது. பாகிஸ்தானின் அரசியல், பொது விவாதம் அதன் உண்மையான தன்மையை பிரதிபலிக்கிறது. தெளிவாக, அவர்கள் கண்ணாடியில் பார்க்க வேண்டிய நேரம் இது.
இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு இடையே உள்ள எந்தவொரு தீர்க்கப்படாத பிரச்சினைகளும் இருதரப்பு ரீதியாக தீர்க்கப்படும் என்று நீண்ட காலமாக ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் இடமில்லை. இது எங்கள் நீண்டகால தேசிய முடிவு. பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை, பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருக்காது என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். இருவரும் நாடுகளும்தான் பொறுப்பேற்கும். அணு ஆயுத அச்சுறுத்தல் என்ற போர்வையில் பயங்கரவாதம் செழிக்க அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. உலகிற்கு இந்தியாவின் செய்தி தெளிவாக உள்ளது. பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளக்கூடாது’’ எனத் தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச் சபையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ‘‘இந்தியா அப்பாவி பாகிஸ்தான் பொதுமக்களைத் தாக்கி, நமது ஆயுதப் படைகளை பதிலடி கொடுக்க வைத்தததாக குற்றம் சாட்டினார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது குறித்த பிரச்சினையை அவர் எழுப்பினார். ஒப்பந்தத்தின் விதிகளை இந்தியா மீறுவதாகவும் குற்றம் சாட்டினார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்தியாவின் ஒருதலைப்பட்சமான மற்றும் சட்டவிரோத முயற்சி ஒப்பந்தத்தின் விதிகளை மீறுவது மட்டுமல்லாமல், சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளையும் மீறுவதாக ஷெரீப் கூறினார். இந்த நீர்நிலைகளில் தனது மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக பாகிஸ்தான் தெளிவுபடுத்தியுள்ளது. எங்களுக்கு, ஒப்பந்தத்தை மீறுவது ஒரு போர் நடவடிக்கை.
காஷ்மீர் மக்களுக்கு நான் அவர்களுடன் நிற்கிறேன். பாகிஸ்தான் அவர்களுடன் நிற்கிறது. விரைவில் ஒரு நாள் காஷ்மீரில் இந்தியாவின் அட்டூழியங்கள் முடிவுக்கு வரும் என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.