
தாராவி மறுவாழ்வுத் திட்டம்:
மும்பை தாராவியில் உள்ள மக்களை முலுண்டில் உள்ள உப்பு நிலத்தில் குடியமர்த்தும் மகாராஷ்டிர அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் சாகர் தேவ்ரே தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு:
மும்பையின் கடலோரப் பகுதிகள் பல்வேறு விரிவாக்கத் திட்டங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டம் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பை அழிப்பதுடன் மும்பை நகரம் முழுவதையும் பாதிக்கும் என்று சாகர் தனது மனுவில் முறையிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் நீதிபதி எம்.எஸ். கர்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நான்கு வார அவகாசம் அளித்துள்ளது. மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் சிங், உப்பு நிலங்கள் மத்திய அரசுக்கு சொந்தமானவை என்றும், அதன் ஒரு பகுதியை மகாராஷ்டிரா அரசு நலத்திட்டங்களுக்காக மாற்றி அமைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மறுவாழ்வுக்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு தேவையான ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும், பதில் தாக்கல் செய்ய அவகாசம் கோரியதாகவும் கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் மிலிந்த் மோர் தெரிவித்தார்.
255.9 ஏக்கர் உப்பு நிலம்:
மறுவாழ்வு கட்டமைப்புகளுக்காக 255.9 ஏக்கர் உப்பு நிலத்தை மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்த ஆகஸ்ட் 7 மற்றும் செப்டம்பர் 30, 2024 தேதியிட்ட இரண்டு அரசாங்கத் தீர்மானங்களை இந்த பொதுநல வழக்கு எதிர்க்கிறது. ஆகஸ்ட் 23ஆம் தேதி வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்பாட்டுத் துறை வெளியிட்ட அலுவலக குறிப்பாணையையும் எதிர்த்து வாதிடுகிறது.
600 பேரின் வேலையைச் செய்யும் AI! வேலை இழப்பு அபாயத்தில் ஜொமேட்டோ ஊழியர்கள்!
உப்பு நிலங்களை மாற்ற ஒப்புதல்:
2014ஆம் ஆண்டு, வனசக்தி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பொதுநல வழக்கை விசாரித்தபோது, உயர்நீதிமன்றம் ஈரநிலங்களைப் பாதுகாக்க மாநில அரசிற்கு உத்தரவிட்டது என்பதை இந்தப் பொதுநல மனு எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், 2017ஆம் ஆண்டில், பாதுகாக்கவேண்டிய ஈரநிலங்களின் வரையறையைத் திருத்திய மத்திய அரசு அதிலிருந்து உப்பளங்ளைை நீக்கியதையும் மனு சுட்டிக்காட்டுகிறது.
ஈரநிலப் பாதுகாப்பை வலியுறுத்தி சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MOEFCC) 2022ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், அதற்கு மாறாக மலிவு விலை வீடுகள் கட்டவும் தாராவி மறுவாழ்வுத் திட்டத்துக்காகவும் உப்பு நிலங்களை மாற்றியமைப்பதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்திருப்பதையும் மனுதாரர் எடுத்துக்கூறியுள்ளார்.
கடலோர சமநிலை:
உப்பளங்கள் கடலோர சமநிலையைப் பராமரிக்கின்றன. மேலும், சதுப்புநிலங்கள் மற்றும் கழிமுகங்களை அழியாமல் காத்து, மண் அரிப்பு, வெள்ளம் போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு தருகின்றன என்று பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களிடம் அவற்றை ஒப்படைப்பது கடுமையான சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கிறது.
தாராவி மறுவாழ்வுத் திட்டம், மலிவு விலை வீடுகளைக் கட்ட உப்பு நிலத்தைப் பயன்படுத்த முன்மொழிகிறது. மாநில அமைச்சரவை மத்திய அரசிடமிருந்து நிலத்தைப் பெற்று குத்தகைக்கு விட அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்படி நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வுக்கான பணிகளை SPV குழு மேற்பார்வையிடுகிறது.
வடிகால் அமைப்பைப் பாதிக்கிறது:
மும்பையின் வணிகத் திட்டங்களுக்காக திறந்தவெளிகள், ஈரநிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை அழித்தொழிக்க கட்டுமான நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் கூட்டு சேர்ந்துள்ளனர் என வழக்கறிஞர் சாகர் தேவ்ரே குற்றம்சாட்டுகிறார்.
"இந்த திறந்தவெளிகளை எல்லாம் கான்கிரீட் கட்டடங்களால் நிரப்பினால், மண்ணில் கசியக்கூடிய நீர் எங்கும் செல்ல முடியாது, இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. தனியார் நிறுவனங்களும் அரசுத் துறைகளும் கைகோர்ந்து சட்டப்பூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது நகரத்தின் வடிகால் அமைப்பைப் பாதித்துள்ளது" என்று சாகரின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ரூ.25,000 கோடிக்கு மேல் முதலீடு:
தாராவி 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 296 ஏக்கர் மறுவாழ்வுத் திட்டத்திற்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ஜனவரி 2024 இல், மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கும் அதானி குழுமத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், நவபாரத் மெகா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் (NMDPL) உருவானது. தாராவியில் வசிக்கும் 7 லட்சம் குடிமக்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுப்பது இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் ஹஃபீஸ் நியமிக்கப்பட்டார்.
இந்தத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் மட்டுமின்றி வணிக மற்றும் தொழில் சார்ந்த கட்டடங்களும் அடங்கும். இத்திட்டத்துக்காக சுமார் ரூ.25,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. கூடுதலாக, தேவையான துணை உள்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்படும். இதற்காக அதிகாரிகள் தாராவியில் வசிப்பவர்களிடம் கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள். 60,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் கணக்கெடுப்பு நிறைவடைந்து, அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன.