Cyclone Montha: வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது, இதனால் ஆந்திராவின் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களின் நீர்மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. வட மாவட்டங்களில் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனிடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிரம் அடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது மோந்தா புயலாக உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
24
ஆந்திராவில் கடக்கும் மோந்தா புயல்
மோந்தா புயல் சென்னையில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 16 கி.மீட்டர் வேகத்தில் ஆந்திராவை நோக்கி மோந்தா புயல் நகரும். ஆந்திராவின் காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடையே நாளை மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 முதல் 110 கிமீ வரை தரைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அளவு மழை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வட மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.
34
ரெட் அல்ர்ட் எச்சரிக்கை
மோந்தா புயலை அடுத்து, ஆந்திராவின் வடக்கு மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பாபட்லா, பிரகாசம், நெல்லூர், கடப்பா, அன்னமய மற்றும் திருப்பதி மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், கோனசீமா, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், பல்நாடு, நந்தியால் மற்றும் சித்தூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மோந்தா புயல் கரையைக் கடப்பதால் ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரையும், கிழக்கு கோதவாரி, அன்னமய்யா, கடப்பா, என்.டி.ஆர், படாலா, கிருஷ்ணா மற்றும் குண்டூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் அக்டோபர் 29ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின் தீவிரத்தை பொறுத்து மேலும் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் புதுச்சேரியின் மாகே, ஏனாவில் அதிகனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 29ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.