ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, நிதிஷ் குமார் துணை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் பாஜக தலைவர்கள் பலர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததையடுத்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவரது இடத்தைப் பிடிப்பார் என்று கூறப்படுகிறது. பீகாரைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் பலர் நிதிஷை துணை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
பாஜக எம்.எல்.ஏ. ஹரிபூஷன் தாக்கூர் பசூல், "நிதிஷ் குமார் துணை ஜனாதிபதியாவதை அனைவரும் விரும்புகின்றனர். நிதிஷ் குமார் துணை ஜனாதிபதியாகிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல, எல்லோரும் அதைத்தான் விரும்புகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
24
ஜகதீப் தன்கர் ராஜினாமா
கூடுதலாக, பாஜக தலைவரும் பீகார் அமைச்சருமான நீரஜ் குமார் சிங் பப்லு, நிதிஷ் குமார் துணை ஜனாதிபதியாவது குறித்து கேட்கப்பட்டபோது, "இது ஒரு நல்ல விஷயம். அவர் துணை ஜனாதிபதியானால், என்ன பிரச்சனை?" என்று கேள்வி எழுப்பினார்.
ஜகதீப் தன்கர் திங்கட்கிழமை உடல்நலக் காரணங்களுக்காக ராஜினாமா செய்தார். அவருக்குப் பிறகு துணை ஜனாதிபதிக்கு வர வாய்ப்புள்ளவர்கள் என பல பெயர்கள் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. இந்நிலையில், பீகார் பாஜக தலைவர்கள் பகிரங்கமாக தங்கள் விருப்பத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். இது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
34
பீகார் முதல்வரை பாஜக முடிவு செய்யும்!
பாஜக வரவிருக்கும் பீகார் தேர்தலுக்கு தங்கள் கட்சியில் இருந்து முதல்வர் வேட்பாளரை நியமிக்கும் என்றும், நிதிஷ் குமாரை நாட்டின் இரண்டாவது உயரிய பதவியில் வைக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் சிலர் கணித்துள்ளனர்.
"பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அடுத்த துணை ஜனாதிபதியாக உள்ளார். பீகார் தேர்தலில் பாஜக தங்கள் முதல்வர் வேட்பாளரை நியமிக்கும். ஜே.டி.யு.வைச் சேர்ந்த ஒருவர் துணை முதல்வராக இருப்பார்" என்று அரசியல் பத்திரிகையாளர் சமீர் சௌகான்கர் 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சில சமூக ஊடக பயனர்கள், நிதிஷ் துணை ஜனாதிபதியாக்கப்படலாம் என்றும், தன்கர் பாஜகவின் தேசிய தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் ஊகிக்கின்றனர்.
நிதிஷ் குமார், 2014-15ல் ஒரு குறுகிய கால இடைவெளியைத் தவிர, 2005 முதல் பீகார் முதல்வர் பதவியில் இருக்கிறார். பீகாரில் நீண்ட காலம் முதல்வர் பதவி வகித்தவரும் அவர்தான். கடந்த ஆண்டு ஜனவரியில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியுடன் உறவுவைத் துண்டித்துக்கொண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) யில் மீண்டும் இணைந்தார். அப்போது, அவர் ஒன்பதாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.