
12 ஜூன் 2025 அன்று, ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் (விமான எண் AI171) அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 260 பேர் கொல்லப்பட்டனர். விமானத்தில் 242 பேர் இருந்தனர். ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பினார். விமானம் விழுந்த இடத்தில் இருந்த பலரும் இறந்தனர்.
இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) முறையான விசாரணையைத் தொடங்கியது. அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) ஆகியவற்றின் நிபுணர்களும் இதில் பங்கேற்றனர்.
இரண்டாவது கருப்புப் பெட்டி அல்லது விமானத் தரவுப் பதிவுக் கருவி விபத்து நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. விமான விபத்து ஏன் நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதில் கருப்புப் பெட்டியிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் முக்கியமானவை. அதன் தரவுகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.
இரண்டு கருப்புப் பெட்டிகளும் (காக்பிட் குரல் மற்றும் விமானத் தரவுப் பதிவுக் கருவிகள்) அகமதாபாத்திலிருந்து டெல்லியில் உள்ள AAIB ஆய்வகத்திற்குக் கொண்டுவரப்பட்டன. AAIB மற்றும் NTSB குழு ரெக்கார்டர்களிடமிருந்து தரவைப் பிரித்தெடுக்க முயன்றன.
முன்பக்க கருப்புப் பெட்டியிலிருந்து நினைவக தொகுதி அணுகப்பட்டு அதன் தரவு பதிவிறக்கம் செய்யப்பட்டது. சாதனத்தின் சுயாதீன மின்சாரம் வடிவமைக்கப்பட்டபடி செயல்படுவது கண்டறியப்பட்டது.
AAIB அதன் 15 பக்க ஆரம்ப அறிக்கையை வெளியிட்டது. அது விபத்து பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை வழங்கியது. விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் ஓட்டத்திலிருந்து துண்டிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் என்ஜின்கள் நின்று போயின.
இரண்டு என்ஜின்களின் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகளும் ஒரு நொடிக்குள் RUN இலிருந்து CUTOFF க்கு மாறின. இதனால் என்ஜின்கள் எரிபொருளைப் பெற முடியாமல் அவை அணைந்தன. என்ஜின்கள் அணைந்ததால், விமானம் உந்தப்படாமல் தரையில் விழுந்தது.
AAIB அறிக்கை காக்பிட் குரல் பதிவுகளை விவரிக்கிறது. கடைசி நேரத்தில், ஒரு விமானி, "ஏன் துண்டித்தீர்கள்?" என்று கேட்டார், மற்றொருவர், "நான் செய்யவில்லை" என்று பதிலளித்தார். இது குழப்பத்தையும், வேண்டுமென்றே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் குறிக்கிறது.
விமானத்தின் இரண்டு என்ஜின்களும் நிறுத்தப்பட்டபோது, அவசர ஹைட்ராலிக் மின்சாரத்திற்காக ரேம் ஏர் டர்பைன் (ஒரு சிறிய ப்ரொப்பல்லர் போன்ற சாதனம்) தானாகவே பயன்படுத்தப்படுகிறது. விசாணையின்போது பெறப்பட்ட சிசிடிவி காட்சிகள் இந்தச் சாதனம் பயன்படுத்தப்படுவதைக் காட்டுகிறது.
விமானிகள் என்ஜின்களை மறுதொடக்கம் செய்ய முயன்றனர். என்ஜின் 1 பகுதியளவு மீட்கப்பட்டது, என்ஜின் 2 தாக்கத்திற்கு முன் மீட்க முடியவில்லை. விமானம் வெறும் 32 வினாடிகள் மட்டுமே காற்றில் இருந்தது.
விபத்துக்குப் பிறகு, விமானம் பறக்க உதவும் உந்துதல் நெம்புகோல்கள் செயலற்ற நிலையில் காணப்பட்டன. அதே நேரத்தில், புறப்படுவதற்கான உந்துதல் இன்னும் செயலில் இருப்பதை கருப்புப் பெட்டி காட்டியது. இது ஒரு தொழில்நுட்பத் துண்டிப்பு அல்லது தோல்வியைக் குறிக்கிறது.
விமானத்தில் நிரப்பப்பட்ட எரிபொருள் சுத்தமாக இருந்தது என விசாரணையின்போது நடந்ததிய சோதனைகளில் தெரியவந்தது. அதில் எந்த அசுத்தமோ அல்லது கலப்படமோ இல்லை என உறுதிசெய்யப்பட்டது.
விமானத்தின் ஃபிளாப் அமைப்புகள் (5 டிகிரி) மற்றும் கியர் (கீழ்நோக்கி) புறப்படுவதற்கு இயல்பானவை. பறவைகளின் செயல்பாடு அல்லது வானிலை தொடர்பான எந்த பிரச்சனையும் இல்லை. வானம் தெளிவாக இருந்தது. நல்ல தெரிவுநிலை இருந்தது. காற்றும் லேசாக வீசியது.
AAIB அறிக்கை, விமானிகளின் தகுதிகள் குறித்து எந்த கேள்வியும் இல்லை என்று கூறுகிறது. இருவரும் மருத்துவ ரீதியாக தகுதி பெற்றவர்கள். அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள்.
போயிங் அல்லது GE மீது எந்த நடவடிக்கையும் எடுக்க AAIB தற்போது பரிந்துரைக்கவில்லை. எந்த தொழில்நுட்பக் கோளாறோ அல்லது நாசவேலையோ கண்டறியப்படவில்லை.
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக ICAO-வுக்கு பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வருடத்திற்குள் விரிவான இறுதி அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.
அகமதாபாத்தில் நடந்த விபத்துக்குப் பிறகு, விமான நிறுவனம் "பாதுகாப்பு இடைநிறுத்தத்தை" தொடங்கியது. அதன் விமானங்களில் கூடுதல் சோதனைகளை நடத்தியது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் குறைக்கப்பட்டன.
இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA, ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானக் குழுவில் பாதுகாப்பு சோதனைகளை அதிகரிக்க உத்தரவிட்டது. ஏர் இந்தியா அதன் போயிங் 777 விமானத்தையும் ஆய்வு செய்தது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு டாடா சன்ஸ் ரூ.1.25 கோடி இழப்பீடு அறிவித்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிர்ச்சி ஆலோசனை வழங்கப்பட்டது.
போயிங் விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் சிக்கல் இருக்கலாம் என்று அமெரிக்க விமான ஒழுங்குமுறை நிறுவனமான FAA 2018 இல் தனது அறிக்கையில் கூறியிருந்தது. விபத்துக்குப் பிறகு, ஏர் இந்தியா இந்த ஆலோசனைக்கு அது செலுத்த வேண்டிய அளவுக்கு கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.