சான்சே இல்ல... விமான சக்கரத்தில் தொற்றி டெல்லி வந்த 13 வயது சிறுவன்! உயிர் பிழைத்தது எப்படி?

Published : Sep 22, 2025, 05:34 PM IST

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன், காபூலில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து கொண்டு 94 நிமிடங்கள் பயணம் செய்து உயிர் பிழைத்துள்ளான். இந்தச் சிறுவனின் செயல், விமான நிலைய பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

PREV
15
விமான சக்கரத்தில் தொற்றிக்கொண்டு வந்த சிறுவன்

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்துகொண்டு டெல்லிக்கு பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 94 நிமிடங்கள் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட அந்தச் சிறுவன் உடல்நலத்துடன் டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கினான்.

25
காபூல் விமான நிலையம்

ஆப்கானிஸ்தானின் காம் ஏர் விமானம் (RQ4401) கடந்த ஞாயிற்றுக்கிழமை காபூலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 8:46 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் டெல்லி டெர்மினல் 3 இல் காலை 10:20 மணிக்கு தரையிறங்கியது.

இந்த விமானத்தில்தான், ஒரு 13 வயது சிறுவன் ரகசியமாக ஒளிந்து கொண்டு பயணம் செய்துள்ளான். குர்தா மற்றும் பைஜாமா அணிந்திருந்த அந்த சிறுவன், ஈரானுக்கு செல்ல விரும்பியதாகவும், தவறுதலாக இந்தியா செல்லும் விமானத்தில் ஏறியதாகவும் கூறப்படுகிறது.

பயணிகளைப் பின்தொடர்ந்து சென்று விமான நிலையத்திற்குள் நுழைந்து, பயணிகள் விமானத்தில் ஏறும் நேரத்தில் சக்கரங்களுக்குள் ஒளிந்து கொண்டதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.

35
டெல்லியில் பிடிபட்ட சிறுவன்

விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, விமான நிலையத்தின் தடைசெய்யப்பட்ட பகுதியில் அந்த சிறுவன் நடந்து செல்வதை ஊழியர் ஒருவர் கண்டார். அவர் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார். மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் சிறுவனை பிடித்து, பின்னர் விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சிறுவன் என்பதால் அவன்மீது சட்டரீதியான குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

45
சிறுவன் உயிர் தப்பியது எப்படி?

பொதுவாக, விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து பயணிப்பது மிகவும் அபாயகரமானது. 30,000 அடி உயரத்தில் வெப்பநிலை -40°C முதல் -60°C வரை இருக்கும். மேலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். இந்த சூழ்நிலையில் உயிர் பிழைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என மருத்துவர்கள் மற்றும் விமான வல்லுநர்கள் கூறுகின்றனர்.

விமான நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன் இந்த சிறுவனின் உயிர் பிழைத்தற்கான சாத்தியக்கூறுகளை விளக்கியுள்ளார். “விமானம் புறப்பட்ட பிறகு, சக்கர அறை கதவு திறந்து, சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட்டு, மீண்டும் கதவு மூடும். அவன் இந்த மூடிய பகுதிக்குள் நுழைந்திருக்கலாம். இந்தப் பகுதியில் வெப்பநிலை சமநிலையில் இருந்திருக்கலாம். சிறுவன் உள்ளே இருக்கும் அமைப்புகளைப் பிடித்துக்கொண்டு உயிர் பிழைத்திருக்கலாம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

55
உயிர் பிழைப்பது அரிது

இதுபோன்ற சம்பவங்களில் உலகளவில் ஐந்து பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்கிறார். விமானத்தின் சக்கரங்களுக்குள் சிக்கி உயிர் பிழைப்பது மிக அரிதானது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, கடும் குளிர், உறைபனி மற்றும் இயந்திரங்களின் ஆபத்துகள் காரணமாக பெரும்பாலானோர் உயிரிழந்து விடுகின்றனர்.

இந்திய விமான நிலையங்களில் இது இரண்டாவது சம்பவமாகும். இதற்கு முன்பு, 1996ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி, பிரதீப் சைனி மற்றும் விஜய் சைனி என்ற இரு சகோதரர்கள் டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து பயணித்தனர். இதில் பிரதீப் உயிர் பிழைத்த நிலையில், விஜய் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories