இந்தியா முழுவதும் இனி 'வந்தே பாரத்' தான்; சாதாரண ரயில்கள் குறைப்பு? நடுத்தர மக்கள் ஷாக்!
இந்தியாவில் தினம்தோறும் ரயில்களில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிமாக உள்ளது. பண்டிகை காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்புதான்.
நீண்ட தூரம் களைப்பின்றி வசதியாக பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். இந்தியாவில் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமின்றி, சதாப்தி, ராஜ்தானி, ஜன்சதாப்தி உள்ளிட்ட அதிவேக ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே நாட்டில் அதிவேகமாக செல்லும் 'வந்தே பாரத்' ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ரயிலுக்கு பயணிகள் மததியில் வரவேற்பு அதிகம் இருக்கும் நிலையில், அதிக ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
வந்தே பாரத் ரயில்கள்
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இந்தியன் ரயில்வே துறைக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்தியாவில் இருக்கை வசதி மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் இப்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களே இயக்கப்படும் நிலையில், விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது தவிர 100 அமிர்த பாரத் மற்றும் 50 நமோ பாரத் ரயில் பெட்டிகள் வாங்கவும், ஏராளமான ரயில் உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றவும் மத்திய பட்ஜெட்டில் ரூ.2.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அட! ரயில் பெட்டி எண்களில் இவ்வளவு ரகசியம் மறைந்திருக்கிறதா? முழு விவரம்!
வந்தே பாரத் ரயில் கட்டணம்
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் அதிவேமாக செல்வதால் பயண நேரம் குறைந்து பயணிகள் பயனடைகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் வந்தே பாரத் ரயில்களின் கட்டணம் எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயணம் செய்யும் வகையில் இல்லை. சாதாரண ரயில்களை விட இதில் பன்மடங்கு கட்டணம் அதிகமாக உள்ளதால் தொழில் அதிபர்கள், பணக்காரர்கள் மட்டுமே வந்தே பாரத் ரயில்களில் பயணம் செய்ய முடிகிறது.
இது மட்டுமின்றி வந்தே பாரத் ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து சாதாரண ரயில்களின் முக்கியத்துவத்தை ரயில்வே குறைத்து விட்டதாக சந்தேகமும் எழாமல் இல்லை. ஏனெனில் வந்தே பாரத் ரயில்கள் காரணமாக பல்வேறு வழித்தடங்களில் சாதாரண ரயில்கள் நீண்ட நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களீல் முதல் பிளாட்பாரம் ஒதுக்குதல் என பல்வேறு விஷயங்களில் மற்ற ரயில்களை விட வந்தே பாரத்துக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படுவதால் சாதாரண படுக்கை வசதி கொண்ட ரயில்கள் குறைக்கப்படுமோ? என்ற அச்சம் நடுத்தர மக்கள் மனதில் எழுந்துள்ளது. ஏற்கெனவே பல்வேறு முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி பெட்டிகள் அதிகமாகியுள்ளன. இதனால் வந்தே பாரத் அதிகமாக வந்தால் சாதாரண ரயில்களின் எண்ணிக்கை குறையும் என்ற மக்களின் அச்சத்தை தவிர்க்க முடியவில்லை.
உலகின் நீளமான ரயில்வே நெட்வொர்க்குகள்! இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?