துணை குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கும் 12 எம்.பி.க்கள்!

Published : Sep 09, 2025, 03:26 PM IST

இந்தியாவின் புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. பிஜு ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி மற்றும் சிரோமணி அகாலி தளம் ஆகிய மூன்று கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

PREV
13
துணை ஜனாதிபதி தேர்தல்

இந்தியாவின் புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி களம் காண்கிறார்.

ஜகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்து இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மூன்று முக்கிய கட்சிகள் இந்த தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இந்தக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வாக்களிக்கப்போவதில்லை.

23
தேர்தலைப் புறக்கணிக்கும் 3 கட்சிகள்

பிஜு ஜனதா தளம் (BJD):

முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் (BJD), இந்த தேர்தலில் இருந்து விலகியிருக்கப் போவதாக அறிவித்துள்ளது. தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும், காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் இருந்தும் சமமான தூரத்தை கடைப்பிடிக்கும் தங்கள் கட்சியின் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சி தெரிவித்துள்ளது.

பிஜு ஜனதா தளத்திற்கு மாநிலங்களவையில் ஏழு எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு மக்களவையில் எம்.பி.க்கள் இல்லை.

பாரத் ராஷ்டிர சமிதி (BRS):

தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சியும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. யூரியா தட்டுப்பாட்டால் தெலங்கானா விவசாயிகள் சந்திக்கும் வேதனையைக் காரணமாகக் காட்டி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கட்சி தெரிவித்துள்ளது.

பி.ஆர்.எஸ். கட்சிக்கு மாநிலங்களவையில் நான்கு எம்.பி.க்கள் உள்ளனர், மக்களவையில் எம்.பி.க்கள் இல்லை.

சிரோமணி அகாலி தளம் (SAD):

சிரோமணி அகாலி தளம் (SAD) கட்சியும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. பஞ்சாபில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசிடம் இருந்தோ, பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசிடம் இருந்தோ எந்த உதவியும் கிடைக்கவில்லை என அக்கட்சி தெரிவித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், அக்கட்சியின் ஒரே மக்களவை எம்.பி. ஆவார்.

33
கூட்டணிகளின் பலம்

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 788 பேர் உள்ளனர். இவர்களில் மாநிலங்களவையில் 245 பேரும், மக்களவையில் 543 பேரும் உள்ளனர். மாநிலங்களவையின் 12 நியமன எம்.பி.க்களும் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.

தற்போது, மாநிலங்களவையில் ஆறு இடங்களும், மக்களவையில் ஒரு இடமும் காலியாக இருப்பதால், தற்போதைது 781 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இந்த தேர்தலில் வெற்றிபெற 391 வாக்குகள் தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்களவையில் 293 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 129 எம்.பி.க்களும் உள்ளனர். அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணிக்கு சுமார் 325 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories