
அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து மருத்துவக் கல்லூரி கட்டடம் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்பட 240க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு முற்றிலுமாக எரிந்து கரிக்கட்டையாகி விட்டன. விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்த நிலையில், அதில் ஒருவர் மட்டும் சிறு காயங்களுடன் அதிசயமாக உயிர் தப்பினார்.
அதாவது லண்டன் குடியுரிமை பெற்ற குஜராத்தை சேர்ந்த விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்பவர் விமானத்தின் அவசர கதவு வழியாக குதித்து உயிர் தப்பினார். ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பேரில் ரமேஷ் மட்டுமே உயிர் பிழைத்தது பேசுபொருளாகியுள்ளது. சிறு காயங்கள் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்து பேசிய ரமேஷ், விமானத்தில் இருந்த மற்றவர்கள் அனைவரும் இறந்தபோது எப்படி உயிர் பிழைத்தேன் என்று தனக்குத் தெரியாது என்று கூறினார்.
உயிர் பிழைத்தது எப்படி?
"நானும் இறந்துவிடுவேன் என்று சிறிது நேரம் நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, நான் உயிருடன் இருப்பதை உணர்ந்தேன், இருக்கையிலிருந்து என்னை அவிழ்த்துவிட்டு, என்னால் முடிந்த இடத்திலிருந்து தப்பிக்க முயற்சித்தேன்" என்று அதிசய மனிதர் விஸ்வாஷ் குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் ரமேஷ் 11A என்ற இருக்கையில் அமர்ந்திருந்தார். அந்த இருக்கை ஜன்னல் ஓரத்தில் இருந்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார்.
ரமேஷ் இருந்த 11A இருக்கை இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 1998ம் ஆண்டு நடந்த ஒரு விமான விபத்தில் இதே 11A இருக்கையில் இருந்த மற்றொருவரும் உயிர் பிழைத்த சம்பவம் இப்போது தெரியவந்துள்ளது. அதாவது டிசம்பர் 11, 1998 அன்று, தெற்கு தாய்லாந்தில் தரையிறங்க முயன்றபோது, தாய் ஏர்வேஸ் விமானம் TG261 சதுப்பு நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 146 பேரில் 101 பேர் கொல்லப்பட்டனர்.
11A இருக்கையில் இருந்த தாய்லாந்து பாடகர் உயிர் பிழைத்தார்
உயிர் பிழைத்தவர்களில் தாய்லாந்து நாட்டின் நடிகரும், பாப் படகருமான ருவாங்சக் லாய்ச்சுக் என்பவரும் ஒருவர். ருவாங்சக் லாய்ச்சுக்க்கு இப்போது 47 வயதாகும் நிலையில், அவருக்கு 20 வயதாகும்போது விமான விபத்து ஏற்பட்டத்தில் அவர் அதிசயமாக உயிர் பிழைத்தார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் 11A இருக்கையில் அமர்ந்து இருந்தது தான். இப்போது ஏர் இந்தியா விமான விபத்தையும், அதில் 11A இருக்கையில் அமர்ந்து இருந்த விஸ்வாஷ் குமார் ரமேஷ் உயிர் பிழைத்ததையும் அறிந்த ருவாங்சக் லாய்ச்சுக் தானும் விபத்து ஏற்பட்டப்போது 11A இருக்கையில் இருந்ததாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக தாய் மொழியில் எழுதப்பட்ட ஒரு பேஸ்புக் பதிவில், "இந்தியாவில் நடந்த விமான விபத்தில் இருந்து தப்பியவர் என் இருக்கையில் அமர்ந்திருந்தார். 11A" என்று ருவாங்சக் லாய்ச்சுக் கூறினார். விஸ்வாஷ் குமார் ரமேஷ், விமானம் விபத்துக்குள்ளானபோது 11A இல் அமர்ந்திருந்தார் என்பதை அறிந்ததும், தனக்கு நெஞ்சு வலிப்பதாக தற்போது 47 வயதான ருவாங்சக் தெரிவித்தார்.
1998 ஆம் ஆண்டுக்கான தனது போர்டிங் பாஸ் தன்னிடம் இல்லை என்று ருவாங்சக் குறிப்பிட்டார், ஆனால் செய்தித்தாள் கட்டுரைகள் தனது இருக்கை எண்ணையும் உயிர் பிழைத்ததையும் ஆவணப்படுத்தியுள்ளன என்றார்.
மரணத்தின் வாசலில் சென்று வந்த பிறகு பல சந்தர்ப்பங்களில், பல ஆண்டுகளாக தான் அதிர்ச்சியில் இருந்ததாகவும், அடுத்த 10 ஆண்டு காலத்தில் மீண்டும் விமானத்தில் பறக்கவில்லை என்றும் ருவாங்சக் லாய்ச்சுக் கூறியுள்ளார்.
விபத்துக்குப் பிறகு தனது வாழ்க்கையை "இரண்டாவது வாழ்க்கை" என்று ருவாங்சக் விவரித்தார். மேலும் ஏர் இந்தியா பேரழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். ருவாங்சக் லாய்ச்சுக்கின் இந்த பேச்சுக்கு பிறகு 11A என்ற எண்ணின் இருக்கை மீதான மர்மம் குறித்து பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். 11A என்பது மிகவும் அதிர்ஷ்டகரமான நம்பர் என்று பலரும் கூறத்தொடங்கியுள்ளனர்.
11A என்பது அதிர்ஷ்ட எண்ணா?
இதனால் 11A இருக்கைக்கான ஆர்வம் இப்போது மக்களிடம் குறிப்பாக விமான பயணிகளிடம் அதிகரித்துள்ளது. பலரும் போட்டி போட்டு பல விமானங்களில் 11A இருக்கையை முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டினார். இதேபோல் அவசர கால வழி அருகே இருக்கும் இருக்கைகளுக்கும் டிமான்ட் அதிகரித்து வருகிறது. ஆனால் அதிர்ஷ்ட எண் என்று ஏதும் கிடையாது. 11A என்பது வெறும் நம்பர் தான். அது அதிர்ஷ்ட எண் அல்ல என்று ஒரு சில நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த இருக்கையில் இருந்தவர்கள் ஏதோ ஒரு வகையில் உயிர் தப்பியுள்ளனர். இதில் அதிர்ஷ்ட எண் என்று ஏதும் இல்லை. ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணியும் உயிரிழந்துள்ளார். அவர் 12 என்ற எண்ணை தனது அதிர்ஷ்ட எண்ணாக கருதினார்.
தனது வாகன பதிவெண்களில் கூட 12 இருக்கும்படி பார்த்துக் கொண்டார். ஆனால் அவர் விமானத்தில் இருந்த இருக்கை எண் 12. விமான விபத்து நடந்தது 12ம் தேதி என்று நெட்டிசன்கள் உதாரணமாக சுட்டிக் காட்டுகின்றனர்.