
உடலில் ராஜ உறுப்பு என்று கல்லீரல் அழைக்கப்படுகிறது. கல்லீரலில் பித்த நீரை சேகரித்து குடலுக்கு கொண்டு செல்லும் பித்தநாளங்களில் உருவாகும் ஒரு அரிய வகை புற்று நோய் தான் பித்தநாள புற்றுநோய். இது தீவிரமான, பொதுவாக முற்றிய நிலையில் கண்டறியப்படும் ஒரு புற்றுநோயாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிக சவாலான காரியம். ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. இருப்பினும் சில அறிகுறிகளை வைத்து நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும். பித்தநாளங்கள் என்பது கல்லீரலில் இருந்து பித்த நீரை சிறுகுடலுக்கு கொண்டு செல்லும் குழாய்களாகும். பித்தநீர் கொழுப்புகளை செரிமானம் செய்ய உதவும் ஒரு திரவம் ஆகும். பித்தநாளங்கள் கல்லீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் அமைந்துள்ளன.
இந்த நாளங்களில் எங்கு வேண்டுமானாலும் புற்றுநோய் உருவாக வாய்ப்புண்டு. பித்தநாள புற்றுநோய் உருவாகும் இடத்தை பொறுத்து இது மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. இன்ட்ரா ஹெப்படிக், எக்ஸ்ட்ரா ஹெப்படிக், டிஸ்டல் சோலோங்கியோ கார்சினோமா என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. இன்ட்ரா ஹெப்படிக் என்பது கல்லீரலுக்கு உள்ளே உள்ள பித்தநாளங்களில் உருவாகும் ஒரு புற்றுநோயாகும். கல்லீரலுக்கு வெளியே உள்ள பித்தநாளங்களில் உருவாகும் புற்றுநோய் எக்ஸ்ட்ரா ஹெப்படிக் என்று அழைக்கப்படுகிறது. கணையத்திற்கு அருகில் உள்ள பித்தநாளத்தின் கீழ் பகுதியில் உருவாகும் புற்றுநோயானது டிஸ்டல் சோலோங்கியோகார்சினோமா என்று அழைக்கப்படுகிறது.
பித்தநாள புற்றுநோயின் அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் தெளிவாக தெரியாது. நோய் முற்றிய பின், தீவிர நிலையை அடைந்த பின்னரே அறிகுறிகள் தெரியத் தொடங்கும். பித்தநாள புற்றுநோய் இருப்பதற்கு முக்கிய அறிகுறிகள் தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறும். இது பித்தநாளங்களில் ஏற்படும் கட்டியானது அடைப்பை ஏற்படுத்துவதால் பித்த நீர் வெளியேற முடியாமல் உடலில் குவிவதன் மூலமாக ஏற்படுகிறது. இது பொதுவான மற்றும் ஆரம்ப கால அறிகுறி ஆகும். பித்த நீர் சரியாக வெளியேறாமல் ரத்தத்தில் கலப்பதால் சிறுநீர் அடர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் வெளியேறும். பித்த நீர் குடலுக்கு செல்லாததால் மலம் களிமண் நிறத்தில் வெளியேறத் துவங்கும். உடலில் பித்த உப்புகள் படிவதால் தோலில் கடுமையான அரிப்பு ஏற்படும்.
அதீத சோர்வு, பசியின்மை, அடிவயிற்றின் மேல் அல்லது வலது பக்கத்தில் வலி, காய்ச்சல், பலவீனம், கல்லீரல் வீக்கமடைவது, விவரிக்க முடியாத அளவிற்கு எந்த காரணமும் இல்லாமல் எடை இழப்பது ஆகியவை இந்த புற்றுநோயின் தீவிர அறிகுறிகள் ஆகும். இந்த புற்றுநோய் ஏற்படுவதற்கு சரியான காரணங்கள் தெரியவில்லை. இருப்பினும் பித்தநாளங்களில் ஏற்படும் வீக்கம், சில தொற்றுகள், கல்லீரலில் இருக்கும் புழுக்கள், பித்த நாளங்களில் ஏற்படும் பிறவிக் கோளாறுகள், நாள்பட்ட ஹெபடைடிஸ் பி அல்லது சி, கல்லீரல் அலர்ஜி, சிரோசிஸ், புகைபிடிப்பது, மது அருந்துதல், நீரிழிவு, உடல் பருமன், சில ரசாயனங்களை எடுத்துக் கொள்வது ஆகியவை காரணங்களாக கூறப்படுகிறது.
பித்தநாள புற்றுநோயை கண்டறிவதற்கு பல்வேறு சோதனைகள் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கல்லீரல் செயல்பாட்டு சோதனைகள், கட்டிக் குறிப்பான்கள், அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன், MRI, MRCP, ERCP போன்ற பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். ERCP முறையில் குழாய் வழியே பித்தநாளங்களை ஆய்வு செய்து பயாப்ஸி எடுக்கவும், அடைப்புகளை நீக்கவும் பயன்படுகிறது. பித்தநாள புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் புற்றுநோயின் வகை, இருப்பிடம், புற்றுநோயின் நிலை, நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் விருப்பங்களை பொறுத்து அமையும். ஆரம்பகட்டத்தில் கண்டறியப்பட்டால், கட்டி முழுமையாக அகற்றக் கூடிய நிலையில் இருந்தால் அறுவை சிகிச்சை செய்யப்படும். கட்டியானது அதைச் சுற்றியுள்ள பகுதியையும் பாதித்திருந்தால் அந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் வெட்டி அகற்றப்படும்.
நோய் தீவிரம் அடைந்த பட்சத்தில் உயர் ஆற்றல் கொண்ட கதிர்கள் பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும் ரேடியேஷன் தெரபி வழங்கப்படும். அறுவை சிகிச்சைக்கு முன் கட்டியை சுருக்கவும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மீதமுள்ள செல்களை அழிக்கவும், அறுவை சிகிச்சை செய்ய முடியாத கட்டிகளுக்கும் இந்த ரேடியேசன் தெரபி வழங்கப்படுகிறது. புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவி இருந்தாலோ அல்லது அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருந்தாலோ புற்றுநோய் செல்களை அழிக்க கீமோதெரபி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. சிலருக்கு புற்றுநோய் செல்களை தாக்கி அளிக்கும் இலக்கு சிகிச்சை என்ற டார்கெட் தெரபி வழங்கப்படும். இந்த சிகிச்சை அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தாது. புற்றுநோய் குணப்படுத்த முடியாத நிலைக்கு போய்விட்டால், நோயாளியின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பேலியேடிவ் கேர் என்கிற தெரபி வழங்கப்படும்.
பேலியேடிவ் கேர் சிகிச்சை முறையில் புற்றுநோயை குணப்படுத்த முடியாது. தேவையான மருத்துவ உதவிகளுடன் அவர்களின் வாழ்நாளை மட்டுமே நீட்டிக்க முடியும். பித்தநாள புற்றுநோயை முன்கூட்டியே கணிப்பது என்பது சவாலான காரியம் ஆகும். இது பொதுவாக முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுவதால், சிகிச்சையும் சவாலாக உள்ளது. ஆரம்ப கால கண்டறிதல் மற்றும் நவீன சிகிச்சைகள் மூலம் நோயாளியை நீண்ட காலம் வாழ வைக்க முடியும். இதுபோன்ற ஆபத்தான புற்று நோய்கள் வருவதை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வேண்டியது அவசியம். அதற்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பு: மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்துமே பொதுவான கல்வி நோக்கங்களுக்காகவும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டுமே. பித்தநாள புற்றுநோய் மிகவும் சிக்கலான ஒரு நோயாகும். ஏதேனும் அறிகுறிகள் அல்லது சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவ நிபுணரை அணுகி நோய் அறிதல் மற்றும் சிகிச்சை திட்டத்தை பெறுவது மிக முக்கியம்.