
விப்ரியோ வல்னிஃபிகஸ் என்பது ஒரு வகையான பாக்டீரியா ஆகும். இது மனிதர்களில் கடுமையான திசு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது மனித திசுக்களை நேரடியாக உண்ணுவதில்லை. ஆனால் வேகமாக பெருகி திசுக்களுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கும் நச்சுக்களை வெளியிடுகிறது. இதன் காரணமாக இது ‘சதை உண்ணும் பாக்டீரியா’ என்று அழைக்கப்படுகிறது. இவை இயற்கையாக கடலோர நீர் பகுதிகளில் குறிப்பாக மிதமான உப்புத்தன்மை கொண்ட மற்றும் சூடான நீர் நிலைகளில் (ஆறுகள் கடலுடன் கலக்கும் முகத்துவாரங்கள்) போன்ற இடங்களில் வாழ்கின்றன. கோடை மாதங்களில் கடல் நீர் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக இருக்கும் பொழுது இந்த பாக்டீரியாக்கள் செழித்து வளர்கின்றன. இவை மாசுபட்ட நீர் அல்லது கழிவுகளால் ஏற்படுவதில்லை, கடல் சுற்றுச்சூழலில் இயல்பாகவே வாழ்கின்றன.
விப்ரியோ வல்னிஃபிகஸ் நோய் தொற்று இரண்டு முக்கிய வழிகளில் பரவுகிறது. சமைக்கப்படாத அல்லது சரியாக சமைக்கப்படாத கடல் உணவுகளான பச்சை சிப்பிகள், சிப்பிகள் மற்றும் மட்டி போன்ற ஓடுடைய மீன் வகைகளை உட்கொள்வதன் மூலம் பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழையலாம். இந்த பாக்டீரியாக்கள் கடல் உணவுகளின் குறிப்பாக சிப்பிகளின் வயிற்றில் வசிக்கும். இந்த அசுத்தமான கடல் உணவை உட்கொள்ளும் பொழுது செரிமான மண்டலத்தின் வழியாக பாக்டீரியாக்கள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து கடுமையான நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன. மேலும் உடலில் காயங்கள் இருக்கும் பொழுது கடல் நீரில் குளிப்பதாலும் இந்த பாக்டீரியாக்கள் உடலில் பரவுகின்றன. திறந்த காயங்கள், சிராய்ப்புகள், கீறல்கள், அறுவை சிகிச்சை காயங்கள் உள்ளவர்கள் கடல் நீர் அல்லது இந்த பாக்டீரியா இருக்கும் உவர் நீரில் குளிக்கும் பொழுது நேரடியாக உடலுக்குள் நுழைகின்றன.
மீன் பிடிக்கும் பொழுது ஏற்படும் காயங்கள், கடல் உணவுப் பொருட்களை கையாளும் பொழுது ஏற்படும் காயங்கள் மூலமாகவும் இந்த நோய் தொற்று ஏற்படலாம். ஆனால் இந்த பாக்டீரியா ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடியாக பரவுவதில்லை. இந்த பாக்டீரியாவால் ஏற்படும் நோய்த்தொற்று உடல் முழுவதும் பரவக்கூடிய செப்சிஸ் அல்லது கடுமையான தோல் மற்றும் திசு தொற்றுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியமான நபர்களுக்கு லேசான தொற்று ஏற்பட்டாலும் குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது உயிருக்கு ஆபத்தானதாக கூட மாறலாம். வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், குளிர், குறைந்த ரத்த அழுத்தம் ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும். காயங்கள் வழியாக பரவும் பொழுது சில தீவிரமான அறிகுறிகள் ஏற்படலாம். தோலில் நிறமாற்றம், காயம் ஏற்பட்ட இடத்தில் வலி, வீக்கம், காயத்தைச் சுற்றிலும் கொப்புளங்கள், புண்கள் ஏற்படுதல், திசுக்கள் சிதைந்து துர்நாற்றத்துடன் கூடிய திரவம் வெளியேறுதல், திசுக்கள் மரணம் ஆகியவை இதன் தீவிர அறிகுறிகள் ஆகும்.
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு இது கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். கல்லீரல் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய், எச்ஐவி, நோய் எதிர்ப்பு சக்தியை அடக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள், இரும்பு சத்து அதிகமாக உள்ளவர்கள், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் மிக அதிகமாக இருக்கலாம். இவர்களுக்கு இந்த பாக்டீரியா ரத்தத்தில் நுழைந்து செப்டிமியா எனப்படும் கடுமையான ரத்தத் தொற்றை ஏற்படுத்தலாம். இது மரணத்திற்கு வழிவகுக்கும். ரத்த ஓட்ட நோய் தொற்றுகள் சுமார் 50 சதவீத மரணத்திற்கு வழிவகுக்கின்றன. இந்த நோய் தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது முக்கியம். தாமதித்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும். நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க நுண்ணுயிர் எதிர்ப்புகள் தேவை. கடுமையான தோல் நோய் தொற்றுகளுக்கு அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம். சில சமயங்களில் பாதிக்கப்பட்ட உறுப்பை அகற்ற வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
இந்தத் தொற்று பரவாமல் தடுப்பதற்கு பச்சையான அல்லது சமைக்கப்படாத கடல் உணவு உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிப்பிகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கடல் உணவை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும். கடல் நீர் அல்லது உவர் நீர், நன்னீர் கலக்கும் இடங்களில் நீந்தும் பொழுது உடலில் காயங்கள் இருந்தால் அவற்றை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். காயங்களை நீர் புகாக கட்டுகளால் மூடிக்கொள்ள வேண்டும். கடல் உணவுகளை கையாளும் பொழுது கைகளில் காயம் ஏற்படாமல் இருக்க கை உறைகளை அணிய வேண்டும். சமைக்கப்படாத கடல் உணவை கையாண்ட பிறகு கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும். சமைத்த கடல் உணவுகளையும், சமைக்காத கடல் உணவுகளையும் தனித்தனியாக வைக்க வேண்டும். கல்லீரல் நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட அதிக ஆபத்து உள்ள பிரிவினராக இருந்தால் கடல் நீர் அல்லது உவர் நீருடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும்.
விப்ரியோ வல்னிஃபிகஸ் மிகவும் அரிதானது என்றாலும் அதன் தாக்கங்கள் மிகவும் தீவிரமானவை. எனவே அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம். இந்த பாக்டீரியா அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2016 முதல் இந்த பாக்டீரியாவின் பாதிப்பால் 448 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை சுமார் 100 பேர் இந்த பாக்டீரியாவால் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த பாக்டீரியாவின் பாதிப்பு இந்தியாவிலும் காணப்படுகிறது. ஃப்ளோரிடா அல்லது அமெரிக்காவில் பரவும் அளவிற்கு அறியப்படாவிட்டாலும் இந்திய கடலோரப் பகுதிகளும், வெப்பமான நீர் நிலைகளிலும் இந்த பாக்டீரியா காணப்படுகிறது. இதன் பாதிப்பு இந்தியாவில் அரிதானவை மற்றும் குறைவாகவே பதிவாகின்றன. இருப்பினும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியாவிலும் கடைபிடிப்பது அவசியம். பொதுமக்கள் இந்த பாக்டீரியா குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.