முதுகுவலியை சாதாரணமாக நினைத்து தைலம் தடவுகிறீர்களா? இரவில் வலி அதிகரித்தல், கால் மரத்துப்போதல் உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவைப்படும் ஆபத்தான அறிகுறிகளை பற்றி பார்ப்போம்.
கனமான பைகளுடன் படிக்கட்டுகளில் ஏறும் பள்ளி மாணவர்கள் முதல் கம்யூட்டர் முன் நீண்ட நேரம் குனிந்து அமர்ந்து வேலை செய்யும் பணியாளர்கள் வரை, முதுகுவலி என்பது அனைத்துத் தலைமுறையினருக்கும் பொதுவான பிரச்சினையாகிவிட்டது. பலர் இதனைத் தைலம் அல்லது சுடுநீர் ஒத்தடம் மூலம் சாதாரணமாகக் கடந்துவிடுகின்றனர். ஆனால், வலி இரவில் தூக்கத்தைக் கெடுத்தாலோ அல்லது உடலின் மற்ற பாகங்களில் பலவீனம் ஏற்பட்டாலோ உடனடியாகக் கவனிக்க வேண்டும்.
24
பெருந்தொற்று போலப் பரவும் முதுகுவலி
சாதாரண சளிக்கு அடுத்தபடியாக 2-வது பொதுவான உடல்நலப் பிரச்சினை முதுகுவலி தான். 10 பேரில் 8 பேருக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது கடுமையான முதுகுவலி ஏற்படுகிறது; இதில் 70% பேருக்கு இது மீண்டும் வருகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, உடற்பயிற்சியின்மை, தவறான தோரணை (Posture) மற்றும் பொருட்களைத் தவறாகத் தூக்குவது ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்கள். தைலம் தற்காலிக நிவாரணம் மட்டுமே தரும். அடிப்படை காரணத்தை சரிசெய்யாது.
34
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
சிகிச்சை எடுத்த பிறகும் முதுகுவலி பல வாரங்களுக்குத் தொடர்ந்தாலோ, நாளுக்கு நாள் அதிகரித்தாலோ அல்லது ஓய்வெடுக்கும் போதும் இரவு தூக்கத்திலும் வலி ஏற்பட்டாலோ மருத்துவரை அணுக வேண்டும். இது முதுகெலும்பு தொற்று, அழற்சி, எலும்பு முறிவு அல்லது அரிதாகக் கட்டிகளின் அறிகுறியாக இருக்கலாம்.
கை, கால்களில் மரத்துப்போதல், கூச்ச உணர்வு (Tingling), பலவீனம், நடப்பதில் சிரமம் அல்லது உடல் சமநிலையை இழப்பது ஆகியவை முதுகெலும்பு நரம்புகள் அழுத்தப்படுவதன் அறிகுறியாகும். குறிப்பாக, கடுமையான கீழ் முதுகுவலியுடன் சிறுநீர் அல்லது மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இழப்பு, சிறுநீர் கழிப்பதில் சிரமம், தொடைகளின் உட்பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் மரத்துப்போதல் ஏற்பட்டால் அது 'கௌடா ஈக்வினா சிண்ட்ரோம்' (Cauda equina syndrome) எனும் அவசர மருத்துவ நிலையாகும். உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் நிரந்தரப் பாதிப்பு ஏற்படலாம்.
தவறான சீட் அமைப்புகளில் நீண்ட நேரம் பணிபுரியும் இளைஞர்களும், வயது முதிர்வு காரணமாக எலும்புத் தேய்மானம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) பாதிப்பு கொண்ட முதியவர்களும் அதிக ஆபத்தில் உள்ளனர்.
எக்ஸ்-ரே, எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் மற்றும் நரம்பியல் பரிசோதனைகள் மூலம் சரியான காரணத்தைக் கண்டறியலாம். வெறும் 3% முதல் 5% பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும். பெரும்பாலான பாதிப்புகளை மருந்துகள், பிசியோதெரபி, முறையான உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமே குணப்படுத்த முடியும்.