
மதிய நேரத்தில் வயிற்றுக்கு இதமாகவும், எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் இருக்கும் உணவு இது. மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி அல்லது கொத்தமல்லி தூக்கலாகச் சேர்த்து வைத்த ரசத்தை, குழைவான சாதத்தில் சற்றுத் தளர்வாக ஊற்றிப் பிசைந்து கொடுக்க வேண்டும். இதற்குத் தொட்டுக்கொள்ள காரம் குறைவாக வறுத்த சிக்கன் ரோஸ்ட் வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள்.
குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான அதிகப்படியான புரதம் இந்த உணவில் உள்ளது. முளைகட்டிய அல்லது சாதாரண பச்சைப் பயறை வேகவைத்து, தக்காளி, பூண்டு, சீரகம் சேர்த்துத் தளர்வாகக் கடைந்து, சாதத்துடன் நெய் ஊற்றிப் பிசைந்து கொள்ளவும். இதற்கு இணையாக முள் இல்லாத மீன் துண்டுகளை மசாலா தடவி தோசைக்கல்லில் வறுத்துக் கொடுக்கலாம்.
சப்பாத்தியைத் தனியாகவும் குழம்பைத் தனியாகவும் கொடுத்தால் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த வழி. மென்மையான சப்பாத்தியின் நடுவே, லேசாக வதக்கிய பன்னீர் துண்டுகள் மற்றும் நீளமாக நறுக்கிய காய்கறிகள் குறிப்பாக கேரட், குடமிளகாய் வைத்துச் சுருட்டி கொடுக்கலாம். கையில் பிடித்துச் சாப்பிடுவதற்கு குழந்தைகளுக்கு இது மிகவும் எளிதாக இருக்கும்.
சாதம் சமைக்க நேரமில்லாத நாட்களில் 10 நிமிடத்தில் செய்யக்கூடிய சத்தான உணவு இது. கோதுமை பிரெட் துண்டுகளுக்கு நடுவே, வேகவைத்த முட்டையைத் துருவியோ அல்லது ஆம்லெட்டாகவோ வைத்து, அதனுடன் பொடியாக நறுக்கிய கேரட், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்து டோஸ்ட் செய்து கொடுக்கலாம். இது புரதமும் காய்கறிகளும் நிறைந்த முழுமையான உணவாகும்.
கீரையைத் தனியாகக் கொடுத்தால் சாப்பிடாத குழந்தைகளுக்கு, கீரையைச் சாதத்துடன் சேர்த்துக் கொடுப்பது சிறந்தது. எந்தக் கீரையாக இருந்தாலும் அதை நன்கு சுத்தம் செய்து, பருப்பு அல்லது பூண்டு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து, நெய் விட்டுச் சாதத்துடன் பிசைந்து கொடுக்கலாம். இதற்குத் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு வறுவல் வைத்தால் கீரையின் சுவை தெரியாமல் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
காலையில் மிக வேகமாகச் செய்யக்கூடிய புரதச்சத்து நிறைந்த உணவு இது. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது வதக்கி, முட்டைகளை உடைத்து ஊற்றி, மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி அதனுடன் சாதத்தைச் சேர்த்தால் சுவையான முட்டை சாதம் தயார். இதற்குத் தொட்டுக்கொள்ள நீர்ச்சத்து நிறைந்த பீர்க்கங்காயை வேகவைத்து, தேங்காய் அல்லது பருப்புப் பொடி தூவிப் பொரியலாகச் செய்து வைக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிகவும் எளிமையான உணவு இது. நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, தோல் உரித்த சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, சிறிது சாம்பார் பொடி அல்லது மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துச் சாதத்துடன் கிளற வேண்டும். இதனுடன் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு ரோஸ்ட் சேர்த்துக் கொடுத்தால் தட்டு காலியாகிவிடும்.
சமைப்பதற்கு மிகக் குறைந்த நேரமே எடுக்கும் சுவையான காம்பினேஷன் இது. கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து, துருவிய தேங்காயைச் சேர்த்து லேசாக வதக்கி உதிரியான சாதத்துடன் கிளறினால் தேங்காய் சாதம் தயார். இதற்கு இணையாக, நறுக்கிய காளானுடன் மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துப் புரட்டி எடுத்தால் சத்தான மஷ்ரூம் ஃப்ரை தயாராகிவிடும்.
வெயில் காலத்திற்கும், எளிதில் செரிமானம் ஆவதற்கும் ஏற்ற உணவு இது. குழைய வடித்த சாதத்தில் காய்ச்சி ஆறிய பால் மற்றும் சிறிது தயிர் சேர்த்து, கடுகு, இஞ்சி, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் மதியம் வரை புளிக்காமல் இருக்கும். இதற்குத் தொட்டுக்கொள்ள குழந்தைகளின் ஆல்-டைம் ஃபேவரைட்டான உருளைக்கிழங்கு வறுவலை காரம் குறைவாகச் செய்து வைக்கலாம்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான மற்றும் எளிதில் செரிமானமாகக்கூடிய பாரம்பரிய உணவு பருப்பு சாதம். துவரம் பருப்புடன் சிறிது பூண்டு, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வேகவைத்து, நெய் ஊற்றி சாதத்துடன் பிசைந்து கொடுக்கலாம். இதற்குத் தொட்டுக்கொள்ள காலிஃப்ளவரைச் சுடுநீரில் போட்டு சுத்தம் செய்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து எண்ணெயில் மொறுமொறுப்பாக வறுத்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதோடு கொஞ்சம் பழங்களையும் சேர்த்து கொடுக்கலாம்.