
மழைக்கால மாலை நேரம் என்றாலே சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என்று தோன்றும். அதுவும் காளானின் மணமும், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயின் காரமும் சேர்ந்து தயாராகும் காளான் சூப் கிடைத்தால் சொல்லவே வேண்டாம். சுவையும் மணமும் ஆளையே மயக்கிவிடும். உடலுக்கு இதமான சூடான பானமாக மட்டுமின்றி, காளானின் சத்துக்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள இந்த சூப் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே ஹோட்டல் ஸ்டைலில் காரசாரமான காளான் சூப்பை எப்படி தயாரிப்பது என்று இங்கே பார்க்கலாம்.
காளானை சுத்தம் செய்து நறுக்கவும்
முதலில் காளான்களை தண்ணீரில் விரைவாகக் கழுவி, ஈரத்தைத் துடைத்து சுத்தம் செய்துகொள்ளவும். பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு மசாலா தயார் செய்யவும்
மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இதனை விழுதாக அரைக்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்தால் சூப்புக்கு நல்ல மணம் கிடைக்கும்.
மசாலாவை வதக்கவும்
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கலவையைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
காளானை சேர்த்து வதக்கவும்
இப்போது நறுக்கி வைத்துள்ள காளான்களைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். காளானில் இருந்து தண்ணீர் வெளியேறி, அதன் பச்சை வாசனை நீங்கி நன்றாக வெந்ததும் மஞ்சள் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து கிளறவும்.
சூப்பை கொதிக்க விடவும்
இதனுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். பாத்திரத்தை மூடி வைத்து சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
சூப்புக்கு கெட்டியான பதம் கொடுக்கவும்
ஒரு சிறிய கிண்ணத்தில் மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும்.இந்தக் கலவையை கொதித்துக்கொண்டிருக்கும் சூப்பில் மெதுவாக ஊற்றி தொடர்ந்து கிளறவும். 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க விடும்போது சூப் சற்று கெட்டியான பதத்திற்கு வரும்.
இறுதியாக மணம் சேர்க்கவும்
கடைசியாக மிளகுத் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையைச் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்துவிட்டு சூடாகப் பரிமாறவும். மணம் மணக்கும் காரசாரமான காளான் சூப் தயார்.
காளானில் புரதம், நார்ச்சத்து, சில பி வகை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. காளானை உணவில் சேர்ப்பது சத்தான உணவுப் பழக்கத்திற்கு உதவும். பூண்டு, இஞ்சி, மிளகு ஆகியவை சேர்வதால் சூப்புக்கு நல்ல மணமும் சுவையும் கிடைக்கிறது.