
சமூக வலைதளங்களைத் திறந்தாலே, ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள் குறித்த எச்சரிக்கை வீடியோக்கள் தான் இப்போது அதிகம் வலம் வருகின்றன. காம்புப் பகுதி பச்சையாகவும், பழம் மஞ்சளாகவும் இருந்தால் அது ரசாயனக் கல் வைத்துப் பழுக்க வைக்கப்பட்டது என்ற ஒரு பொதுவான கருத்து மக்களிடம் பரவியுள்ளது. ஆனால், இந்த வைரல் வீடியோக்களைப் பார்த்துப் பதற்றமடையத் தேவையில்லை என்கிறார்கள் உணவுக்கட்டுப்பாட்டு நிபுணர்கள்.
இந்தியாவில் தற்போது பெரும்பாலான பெரிய விநியோகஸ்தர்கள், பழங்கள் இயற்கையாகச் சுரக்கும் ஹார்மோனுக்கு இணையான எத்திலீன் (Ethylene) வாயுவைப் பயன்படுத்தியே பழங்களைப் பழுக்க வைக்கின்றனர். அறுவடைக்குப் பிறகு பழங்கள் விரைவாகப் பழுப்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.
முன்பெல்லாம் கால்சியம் கார்பைடு எனப்படும் ரசாயனக் கற்கள் சட்டவிரோதமாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. நச்சுத்தன்மை கொண்ட இந்த ரசாயனத்திற்கு இந்தியாவில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான விதிகளாலும், தொடர் கண்காணிப்பாலும் இதன் பயன்பாடு பெருமளவு குறைந்துவிட்டது.
பழத்தின் நிறம் சீரற்று இருப்பதை வைத்து மட்டும் அது ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்டது என முடிவுக்கு வந்துவிட முடியாது. சேமிப்பு முறை, போக்குவரத்து மற்றும் தட்பவெப்ப நிலை காரணமாக இயற்கையாகப் பழுத்த பழங்கள் கூட சில நேரங்களில் சீரற்ற நிறத்தில் இருக்க வாய்ப்புள்ளது. பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும் அனைத்து வாழைப்பழங்களும் ஆபத்தானவை என்று நினைப்பது தேவையற்ற பயம்.
உண்மையில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களைக் கண்டறிய அதன் நிறத்தை விட, வாசனை மற்றும் கெட்டித்தன்மை தான் முக்கியம். பழம் பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் பழுத்தது போல் தெரிந்தாலும், தொட்டுப் பார்த்தால் இயல்புக்கு மாறாகக் கடினமாக இருப்பதோடு, அதற்கே உரிய இயற்கையான நறுமணமும் இருக்காது. ரசாயன நெடி ஏதேனும் வருகிறதா என்பதையும் கவனிப்பது அவசியம்.
அங்கீகரிக்கப்பட்ட எத்திலீன் முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. சட்டவிரோதமான ரசாயனங்களைச் சுகாதாரமற்ற முறையில் பயன்படுத்தும் போது மட்டுமே நிஜமான சிக்கல் எழுகிறது. சந்தையில் பழங்களை வாங்கும் போது அளவுக்கு அதிகமான பளபளப்புடன் இருக்கும் வாழைப்பழங்களைத் தவிர்ப்பது நல்லது.
லேசான நறுமணத்துடன், தொடுவதற்கு மிதமான கெட்டித்தன்மையுடன் இருக்கும் பழங்களைத் தேர்ந்தெடுக்கலாம். வீட்டிற்கு வாங்கி வந்த பிறகு மிக வேகமாகப் பழுக்கும் அல்லது சீரற்ற முறையில் அழுகும் பழங்களைச் சாப்பிட வேண்டாம். பழங்களைச் சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் நன்றாகக் கழுவுவது பல ஆபத்துகளைத் தடுத்துவிடும்.
வைரல் வீடியோக்கள் சொல்லும் குறுக்குவழிகளை நம்புவதை விட, நம்பிக்கையான வியாபாரிகளிடம் சீசனுக்கு ஏற்ற பழங்களை வாங்குவதே எப்போதுமே பாதுகாப்பானது. சரியான முறையில் பெறப்படும் பட்சத்தில் சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான வாழைப்பழங்கள் பாதுகாப்பானவையே என்பதால், நுகர்வோர் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.