தமிழ்நாட்டில் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் மஞ்சும்மல் பாய்ஸ் பற்றிய பேச்சு தான். அந்த அளவுக்கு தமிழகமெங்கும் சக்கைப்போடு போட்டு வருகிறது இப்படம். ஒரு தமிழ்படம் கூட வெற்றி அடையாதா என்கிற ஏக்கத்தில் இருந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பட்டைய கிளப்பி வருகிறது. தமிழ்படங்களைக் காட்டிலும் மஞ்சும்மல் பாய்ஸுக்கு தான் அதிகளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
24
Manjummel Boys box office
மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு கேரளாவுக்கு நிகராக தமிழ்நாட்டில் வரவேற்பு கிடைக்க முக்கிய காரணம் அதன் கதை முழுவதும் தமிழ்நாட்டில் நடப்பது தான். கடந்த 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு சுற்றுலா வந்திருந்த கேரளாவின் மஞ்சும்மல் பகுதியை சேர்ந்த நண்பர்கள் குழுவில் ஒருவர் மட்டும் எதிர்பாரா விதமாக குணா குகையில் சிக்கிக் கொள்கிறார். அவரை அவரது நண்பர்கள் எப்படி மீட்டார்கள் என்பது தான் கதை.
அதுமட்டுமின்றி இப்படத்திற்கு மற்றுமொரு பிளஸ் ஆக அமைந்துள்ளது குணா படத்தின் கனெக்ஷன். குணா படத்தில் கமல்ஹாசன் பாடிய கண்மணி அன்போடு காதலன் பாடல் அந்த படத்துக்கு எப்படி ஒரு உயிரோட்டமாக அமைந்திருந்ததோ, அதை மிஞ்சும் அளவுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி இதுவரை காதலர்கள் கொண்டாடிய அப்பாடலை தற்போது நண்பர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மஞ்சும்மல் பாய்ஸ் தான்.
44
Manjummel Boys Record Breaking Collection in Tamilnadu
இப்படம் உலகளவில் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இரண்டு வாரங்களை கடந்து வெற்றிநடை போட்டு வரும் இப்படம் உலகளவில் ரூ.90 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை இப்படம் ரூ.15 கோடி வசூலித்து உள்ளதாம். தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மலையாள படம் ஒன்றிற்கு இதுவரை இந்த அளவு வரவேற்பு கிடைத்ததில்லை. 15 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்கிற சாதனையையும் மஞ்சும்மல் பாய்ஸ் நிகழ்த்தி இருக்கிறது.