உலகக் கோப்பை கால்பந்து குரூப் டி போட்டியில், போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியது. 11-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஃபோலாரின் பலோகன் நடத்திய ஒரு அட்டாக்தான் ஆஸ்திரேலியாவின் செல்ஃப் கோலுக்கு வழிவகுத்தது. இடது விங்கில் பந்துடன் வேகமாக முன்னேறிய பலோகனை, ஆஸ்திரேலிய டிஃபண்டர் கேமரூன் போர்ஜஸ் தடுக்க முயன்றார். ஆனால், பந்து அவர் காலில் பட்டு, அவர்களது சொந்த கோல் வலைக்குள் சென்றது. இந்த செல்ஃப் கோல் மூலம் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது.
கோல் அடித்து சமன் செய்ய ஆஸ்திரேலியா எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. அமெரிக்க வீரர்களை தடுக்க முயன்றபோது, ஆஸ்திரேலிய டிஃபண்டர்களான ஜோர்டான் போஸ் மற்றும் அலெஸாண்ட்ரோ சிர்காட்டி ஆகிய இருவரும் மஞ்சள் அட்டை வாங்கினர்.
ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் அமெரிக்காவின் இரண்டாவது கோல் வந்தது. அன்டோனி ராபின்சன் எடுத்த கிக், செர்ஜினோ டெஸ்ட் வழியாக கோல் போஸ்ட்டுக்கு மிக அருகில் இருந்த அலெக்ஸ் ஃப்ரீமேனிடம் சென்றது. ஃப்ரீமேன் அந்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார். லைன் நடுவர் உடனடியாக ஆஃப்சைடு கொடியை உயர்த்தினாலும், VAR சோதனையில் அது கோல் என உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவின் வலுவான டிஃபன்ஸை மீறி ஆஸ்திரேலியாவால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், ஆட்டம் 2-0 என்ற கோல் கணக்கில் முடிந்தது.