நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (27). பொறியியல் பட்டதாரி. இவர் சென்னை குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்த சுவேதா (21). இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே ராமச்சந்திரனும், சுவேதாவும் பேசிக்கொண்டு இருந்த போது
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த காதலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுவேதா கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சுவேதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், ராமச்சந்திரனும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராமச்சந்திரனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் ஒரு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு பிறகு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலையில் தனது சொந்த ஊரில் இருந்த ராமச்சந்திரன் வீட்டின் பின்புறத்தில் இருந்த புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.