திருவள்ளூர் மாவட்டம் இருளஞ்சேரி கிராமத்தில், தனது கர்ப்பிணி மனைவியை கிண்டல் செய்த அண்ணி சாந்தியை, கொழுந்தன் இசைமேகம் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். சிகிச்சை பலனின்றி சாந்தி உயிரிழந்த நிலையில், தலைமறைவான இசைமேகத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த இருளஞ்சேரி கிராமம் கலைஞர் நகரை சேர்ந்தவர் இளையராஜா(30). தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி (26). இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
24
மனைவியை கிண்டல் செய்த அண்ணி
இந்நிலையில் இளையராஜாவின் தம்பி 28 வயதான இசைமேகத்துக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்து வருகிறார். இந்நிலையில் அண்ணி சாந்தி இசைமேகத்தின் மனைவியிடம் அவ்வப்போது சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மனைவி கர்ப்பமாக இருப்பதை அண்ணி சாந்தி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
34
ஆத்திரத்தில் கொழுந்தன்
இதனால் ஆத்திரமடைந்த இசைமேகம் சாந்தியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று மருத்துவர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்து விட்டு தப்பியோடி தலைமறைவாக உள்ள இசைமேகத்தை தேடி வருகின்றனர். அண்ணியை கொழுந்தன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.