சென்னை மயிலாப்பூரில் ரவுடி மௌலி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான விஜயகுமாரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது தப்ப முயன்ற விஜயகுமாரை போலீசார் தற்காப்புக்காக காலில் சுட்டுப் பிடித்தனர்.
சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் சுப்புராயன் தெருவில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவுடி மௌலி (24). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி மௌலி இருசக்கர வாகனத்தில் மந்தைவெளியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே வழிமறித்து மௌலியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியது.
24
ரவுடிகள் கைது
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி கௌதம் (19), விஜயகுமார் என்ற பிக் ஷோ(21), சபரி, மணி, புருஷோத்தமன் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் கெளதம், நிரஞ்சன் ஆகிய இரண்டு கைது செய்யப்பட்டனர்.
34
துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய ரவுடியான விஜயகுமாரை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்துள்ளார். இதனையடுத்து தற்காப்புக்காக போலீசார் விஜயகுமார் காலில் சுட்டு பிடித்தனர். வலியால் அலறி துடித்த விஜயகுமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கையில் வெட்டு காயம் ஏற்பட்ட காவலர் தமிழரசன் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சரித்திர பதிவேடு குற்றவாளியான விஜயகுமார் மீது இரண்டு கொலை முயற்சி வழக்கு உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.