கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி(50). இவரது மகன் சுபாஷ்(26). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே இடத்தில் அவருடன் வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு சுபாஷின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், இவர்களது காதலுக்கு இருவீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு எழுந்ததால் வேறு வழியில்லாமல் கடந்த மாதம் 27ம் தேதி கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து சுபாஷ் தனது மனைவி அனுசுயாவை அழைத்து கொண்டு நேற்று சொந்த ஊருக்கு வந்துள்ளார்
இவர்களுக்கு தண்டபாணியின் தாய் கண்ணம்மா அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த தண்டபாணி கடும் ஆத்திரத்தில் தாய் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுபாஷ் மற்றும் தாய் கண்ணம்மாவையுத் வெட்டியுள்ளார். இதனை தடுக்க முயன்ற மருமகளுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டி விழுந்தது. இதில், மகன் மற்றும் தாய் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
மருமகள் அனுசுயா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது அனைவரும் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அனுசுயாவை மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுபாஷ் மற்றும் கண்ணம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள தண்டபாணியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.