காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்துள்ள எச்சூர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குமுதா டோமினிக். இவரது மகன் ஆல்பர்ட்(30). ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளராக உள்ளார். ஸ்கிராப் எடுப்பது, கட்டுமான பொருட்கள் வினியோகிப்பது, தொழிற்சாலைகளில் கழிவுகள் எடுக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்துள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் 5ம் தேதியன்று ஒப்பந்தம் எடுத்த தனியார் ஆலையில் முன்பாக ஆல்பர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 4 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆல்பர்ட் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில், நிலை குலைந்த ஆல்பர்ட்டை முகம், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தடுக்க வந்த அவரது நண்பர்களையும் வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதில், ஆல்பர்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
murder
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த 7-ம் தேதி இந்த கொலை வழக்கு தொடர்பாக சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த பிரணவ் (20), மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் (21), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தினேஷ் குமார் (21) ஆகியோர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது இந்த கொலையில் 3 சிறுவர்கள் உட்பட 21 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான எச்சூரை சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட பாமக நிர்வாகி சுரேஷ் (32), கட்டுமான நிறுவன தொழில் அதிபர் செந்தில்குமார் (48) உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இறுதியில் தொழில் போட்டு காரணமாக இந்த கொலை அரங்கேற்றப்பட்டது தெரியவந்தது. கூலிப்படை தலைவனாக செயல்பட்ட மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.