காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சிமன்ற தலைவர் பி.பி.ஜி.சங்கர் (42). இவர் பாஜக எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு மாநில பொருளாளராக இருந்து வருகிறார். இவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு தனது காரில் டிரைவருடன் சென்னையில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கார் பூந்தமல்லி நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென வழிமறித்த கும்பல் காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். அப்போது, காரில் இருந்து இறங்கி பி.பி.ஜி.சங்கர் சாலையில் ஓடியுள்ளார்.
ஆனால், அந்த மர்ம கும்பல் அவரை விடாமல் விரட்டி சென்று ஓட ஓட சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பி.பி.ஜி.சங்கர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பி.பி.ஜி.சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவி வருவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.