திருவாரூர் அருகே உள்ள தண்டலை வடக்குத் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் இளைய மகன் அஜித் (28). இவர் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். திருவாரூர் அருகே உள்ள கேக்கரை பகுதியைச் சேர்ந்த செல்லப்பா மகள் மதுமிதா (29). இவர் சென்னை பெருநகர காவல் ஆயுதப் படையில் இரண்டாம் நிலை காவலராக அஜித்துடன் பணிபுரிந்து வந்துள்ளார். இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த நிலையில், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாகவும் மாறியுள்ளது.
இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சென்னையில் ஒரே வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி ஒன்றாக லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெண் காவலர் மதுமிதா மூன்று மாதம் கர்ப்பமாகி உள்ளார். இதனையடுத்து அதே மாதம் டிசம்பர் 11ம் தேதி விழுப்புரத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது டிசம்பர் 10ம் தேதியே தான் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி அஜித் திருவாரூர் சென்றுள்ளார்.
இந்நிலையில் திருவாரூருக்கு சென்ற அஜீத்துக்கு வேறு பெண்ணை பெற்றோர்கள் பேசி முடித்துள்ளனர். இதை எப்படியோ அறிந்து கொண்ட மதுமிதா அஜித் குடும்பத்தாரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் அஜித்திற்கும் மதுமிதாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அஜித் தனது நண்பர் மூலம் திருவாரூரில் இருந்து கருக்கலைப்பு மாத்திரையை கொரியர் மூலம் வாங்கி அதை வாந்தி சரியாவதற்கான மாத்திரை என்று மதுமிதாவிடம் கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார்.
இது குறித்து மதுமிதா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து மார்ச் 10 ம் தேதி மண்ணடி மாரியம்மன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். அப்போது மதுமிதாவின் பெற்றோர் அஜித்தின் நண்பர்கள் உடன் இருந்துள்ளனர். தொடர்ந்து பெரியமேடு சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்துள்ளனர்.
திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் பிரச்சனைகளுக்கிடையில் திருமணம் நடந்ததால் மன உளைச்சலாக இருப்பதாக கூறி நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கூறிய அஜித் திரும்ப வரவில்லை. இதையடுத்து திருவாரூர் சென்ற மதுமிதா தனது கணவர் அஜீத் வீட்டின் முன் தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் போலீசார் மதுமிதாவை சமாதானப்படுத்தி உறவினர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.