
தமிழ் சினிமாவில் இரண்டு ஹீரோக்கள் அல்லது இரண்டு ஹீரோயின்கள் நடித்து பார்த்திருக்கிறோம். அதேபோல் இரண்டு கிளைமாக்ஸ் வைத்து வெளியான படங்களை பற்றி கேள்விப்பட்டிருப்பது அரிது தான். அப்படி இரண்டு கிளைமாக்ஸ் உடன் வெளியான தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கபாலி
2016 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தில் இந்தியாவில் ஒரு கிளைமாக்சும் மலேசியாவில் ஒரு கிளைமாக்சும் வைத்து ரிலீஸ் செய்திருந்தார் இயக்குனர் பா ரஞ்சித். இந்தியாவில் வைக்கப்பட்ட கிளைமேக்சில் ரவுடிகளை சுட்டுக் கொன்ற பின்னர் ஒரு துப்பாக்கி சத்தம் கேட்கும் அதோடு ஓபன் கிளைமாக்ஸ் ஆக படத்தை முடித்து இருந்தனர்.
ஆனால் மலேசியாவில் இந்த கிளைமாக்ஸ் அங்குள்ள சென்சார் போர்டு அனுமதி வழங்கவில்லை. குற்றம் செய்த ரஜினிக்கு தண்டனை கொடுக்கும் படியான கிளைமேக்ஸ் இருக்க வேண்டும் என சொன்னதால் ரஜினி போலீசில் சரணடைவது போல் காட்சிப்படுத்தி இருந்தார் ரஞ்சித்.
விண்ணைத்தாண்டி வருவாயா
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு திரிஷா நடிப்பில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திலும் இரண்டு கிளைமாக்ஸ் உள்ளது. இப்படத்தின் தமிழ் கிளைமாக்சில், ரொம்ப நாளைக்கு அப்புறம் சிம்பு திரிஷாவை சந்திக்கும் போது அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆனது போல் காட்டி, சிம்புவின் காதல் தோல்வியில் முடிந்தது போல் காட்டி இருப்பார்கள். ஆனால் இந்த கிளைமாக்ஸ் தெலுங்கு ஆடியன்ஸ் மத்தியில் எடுபடாமல் போனதால் அதில் நாக சைதன்யா, சமந்தாவை கல்யாணம் செய்துகொண்டது போல் காட்டி இருந்தார் கௌதம் மேனன்.
கிரீடம்
2007 இல் இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் அஜித் நடித்த படம் கிரீடம். இப்படத்திற்கு முதலில் இருந்த கிளைமாக்ஸில் அஜித் ரவுடியை கொலை செய்ததால் அவருக்கு தண்டனை கிடைப்பதோடு, சிறுவயதில் இருந்து அவர் ஆசைப்பட்ட போலீஸ் வேலையும் கிடைக்காமல் போகிறது. இந்த கிளைமாக்ஸ் ரசிகர்கள் ஏற்காததால் தியேட்டருக்கு வரும் கூட்டமும் குறைந்தது.
இதனால் சுதாரித்துக் கொண்டு ஏ எல் விஜய், போலீஸ் ஆள் தேடப்பட்டு வந்த ரவுடியை அஜித் கொன்றதால் அவரை கோட் விடுதலை செய்வது போலவும், அதன் பின்னர் அவரது கனவான போலீஸ் வேலை கிடைத்து, போலீஸ் டிரஸ்ஸில் வந்து தன் தந்தை ராஜ்கிரனுக்கு சல்யூட் அடிப்பது போலவும் கிளைமாக்ஸை மாற்றினர் அதன்பின்னரே படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
இதையும் படியுங்கள்... மாட்டிக்கிட்ட பங்கு... ஒரே பாடல் வரிகளை மாத்தி மாத்தி 6 பாடல்களில் பயன்படுத்திய நா முத்துக்குமார்!!
வேட்டையாடு விளையாடு
கௌதம் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படம் ரிலீஸ் ஆகும் முன்னரே இரண்டு கிளைமாக்ஸ் படமாக்கி வைத்திருந்தார் கௌதம் மேனன். அதில் ஒன்று ஹேப்பி என்டிங் ஆகவும் மற்றொன்று சோகமாகவும் முடியும்படியாக அவர் காட்சிப்படுத்தி இருந்தார்.
முதல் கிளைமாக்ஸ் இல் கமலஹாசன் ஜோதிகாவை தேடும்போது ஒரு குழியில் இருந்து அவரை தோண்டி எடுத்து கட்டிப்பிடித்து அழும்படியாக முடித்து இருப்பார். ரசிகர்களிடம் இந்த கிளைமாக்ஸ் எடுபடாததால், ஜோதிகாவும் கமல்ஹாசனும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழும்படி மற்றொரு கிளைமாக்ஸில் காட்டி இருந்தார் கௌதம் மேனன்.
கல்லூரி
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா உள்பட முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்து வெளிவந்த படம் கல்லூரி. இந்தப் படத்துடைய கிளைமாக்ஸ் 2000 ஆம் ஆண்டு தர்மபுரியில் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து எடுத்திருந்தார்கள். அவர்கள் எடுத்த கிளைமாக்ஸில் ஒரு கோர்ட் சீனும் காட்டியிருப்பார்கள்.
ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முந்தைய நாள் தர்மபுரி கேசில் தீர்ப்பு வந்து அதில் சம்பந்தப்பட்ட மூவருக்கு மரண தண்டையும் விதிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் படமாக்கிய நீதிமன்ற காட்சிகள் அதற்கு சற்றே மாறாக இருந்தால் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அதனை நீக்கினர்.
காதலர் தினம்
1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த படம் காதலர் தினம். இந்தப் படத்துடைய கிளைமாக்சில் விஷம் குடித்து ஹீரோயின் இறப்பது போல் காட்சிப்படுத்தி இருப்பார்கள். ஆனால் இந்த கிளைமாக்சுக்கு நெகடிவ் விமர்சனம் வந்ததால், அதை மாற்றி குணால் ஹீரோயினை கரம்பிடிப்பதை போல் காட்சிப்படுத்தி இருந்தனர். கிளைமாக்ஸ் ரீசூட் பண்ணுவதற்கு குணாலின் கால்ஷீட் கிடைக்காததால் வேறு ஒருவரை வைத்து எடுத்துவிட்டு குணாலின் போட்டோவை எடிட் செய்து வைத்து இருந்தனர்.
ப்ரியமுடன்
வின்சன்ட் செல்வா இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து 1998 இல் வெளிவந்த படம் ப்ரியமுடன். இப்படத்தில் ஒரு வித்தியாசமான நெகட்டிவ் கேரக்டரில் விஜய் நடித்திருப்பார். படத்துக்கு முதலில் எழுதப்பட்ட கதைப்படி கிளைமாக்ஸில் போலீஸ் விஜய்யை சுட்டதும் விஜய் இறந்துவிடும்படியான காட்சி படமாக்கப்பட்டது.
விஜய் இறந்து போகும்படியான கிளைமாக்ஸ் வைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என விஜய்யின் தந்தையும் அப்படத்தின் தயாரிப்பாளருமான எஸ். ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார். இதனால் அப்போதே மற்றும் ஒரு கிளைமாக்ஸையும் படம் ஆக்கி இருக்கிறார்கள்.
அதில் போலீஸ் விஜயை சுடும்போது அவர் அதிலிருந்து தப்பி காதலியுடன் ஓடி விடுவது போல காட்சிப்படுத்தி இருந்தார்களாம். ஆனால் படத்தின் எடிட்டிங் முடிந்த பின்னர் இயக்குனருக்கு இந்த கிளைமாக்ஸ் திருப்தி அளிக்காததால் முதலில் எடுத்த கிளைமாக்ஸை படத்தில் வைத்தார். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் சீசன் 8.. கமலை மிஞ்சுவாரா விஜய் சேதுபதி - இணையவாசிகள் ரியாக்ஷன் எப்படி இருக்கு?