“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக நடித்ததன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான விஜே சித்ரா டிசம்பர் 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்ய ஸ்ரீ சித்ராவின் குடும்பத்தினர், மாமனார், மாமியர், கணவர் ஹேமந்த், சக நடிகர், நடிகைகள், நண்பர்கள், ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், சித்துவின் உதவியாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
கிட்டதட்ட 15 பேரிடம் நடத்தப்பட்ட 16 பக்க விசாரணை அறிக்கையை கடந்த மாதம் கோட்டாட்சியர் திவ்ய ஸ்ரீ காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனிடையே சித்ராவின் தாயார் தனது மகளின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே 2015ம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்ட மருத்துவ சீட்டு மோசடி வழக்கில் ஹேமந்த் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சித்ராவின் மரண வழக்கையும் மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றி சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்தார்.
ஜாமீன் கோரி ஹேமந்த் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரின் 10 ஆண்டு கால நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த சையது ரோஹித் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஹேமந்திற்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சக நடிகருடன் நடனமாடியது குறித்து இருவருக்கும் இடையில் சண்டை நீடித்து வந்ததாகவும், அனைத்து தகவல்களும் தெரிந்த தன்னை இதுவரை போலீசார் விசாரணைக்கு அழைக்கவில்லை என்றும் கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
தற்போது சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட அன்று நண்பர் ஒருவருடன் ஹேமந்த் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், ஆமா செல்லக்குட்டி பிரமிஸ் பண்ண மாதிரி இன்னைக்கு அவன் கூட ஃபேர் டான்ஸ் எல்லாம் ஆடல இல்ல அப்படின்னு கேட்டேன். அப்போ அவ ஆடினேன்னு சொன்னால், எனக்கு கண்ணே கலங்கிடுச்சி. ஏண்டி! இப்படி பண்றன்னு சொன்னேன். வெளிய தம் அடிக்க போனேன் வந்தேன், ஏதோ ஒரு மாதிரியே உட்கார்ந்துக்கிட்டு இருக்கா?. வெளிய புல்வெளி மாதிரி இருக்கும் அங்க உட்கார்ந்து கூப்பிட்டேன். வா சித்துன்னு... இதோ வர்றேன்னு சொன்னவள் டக்குன்னு கதவை மூடிட்டால். திறக்கவே இல்ல. ஜன்னலை தட்டிப்பார்த்தும் திறக்கல. அப்புறம் போய் ரூம் சாவி வாங்கிட்டு வந்து திறந்து பார்த்தால் என் கண்ணு முன்னாடி தொங்குறாடா? என பேசியிருப்பது பதிவாகியுள்ளது. இதன் மூலம் சித்ரா வேறு ஒரு நடிகருடன் நடனமாடியதால் ஹேமந்துடன் பிரச்சனையானது தெரியவந்துள்ளது.