சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு பல்வேறு புதிய படங்கள், வெப் சீரிஸ்கள், டாக்குமென்டரிகள் மற்றும் காமெடி ஸ்பெஷல்கள் வெளியாக உள்ளன. குறிப்பாக ஷாஹித் கபூர், ராஷ்மிகா மந்தனா, கிருத்தி சனோன் நடித்துள்ள காக்டெய்ல் 2, மலையாள ஆக்ஷன் த்ரில்லரான காட்டாளன், கங்கனா ரனாவத் நடித்துள்ள பாரத் பாக்ய விதாதா உள்ளிட்ட படைப்புகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் மிட்விண்டர் பிரேக் படத்தில் லெஸ்லி மான்வில்லே மற்றும் சியாரன் ஹிண்ட்ஸ் நடித்துள்ளனர். ஓய்வுபெற்ற தம்பதியினர் ஆம்ஸ்டர்டாமுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, தங்களது வாழ்க்கையையும் உறவையும் மீண்டும் புரிந்துகொள்ளும் அனுபவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
நெட்ஃப்ளிக்ஸில் ஆகஸ்ட் 11-ம் தேதி ரோரி ஸ்கோவெல்: தி ஷோ மஸ்ட் கோ ஆன் என்ற காமெடி ஸ்பெஷல் வெளியாகிறது. இதில் ரோரி ஸ்கோவெல் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பைபிள் சம்பவங்கள், குடும்பம் மற்றும் தனது தந்தையின் கடைசி ஆசை உள்ளிட்ட பல விஷயங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார்.
அதே ஆகஸ்ட் 11-ம் தேதி உலகப் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் ஜோஸ் மொரின்ஹோவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட மூன்று பாக டாக்குமென்டரியான மொரின்ஹோ வெளியாகிறது. அவரது விளையாட்டு பயணம் மற்றும் வாழ்க்கையின் முக்கிய கட்டங்களை பதிவு செய்யும் இந்த தொடரில் ஜ்லாட்டன் இப்ராஹிமோவிச், ஃபிராங்க் லேம்பார்ட் உள்ளிட்ட கால்பந்து பிரபலங்களும் இடம்பெறுகின்றனர். இதுவும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.