கம்பேக் கொடுத்தாரா விக்ரம்? வீர தீர சூரன் பாகம் 2 விமர்சனம் இதோ
அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
Veera Dheera Sooran Part 2 Review : நடிகர் விக்ரம் நடிகராக தன்னை தொடர்ந்து நிரூபித்து வந்தாலும் கமர்ஷியல் ஹிட் என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. அவர் சோலோ ஹீரோவாக நடித்த பல படங்கள் ஏமாற்றம் அளித்தன. கடைசியாக நடித்த `தங்கலான்` கூட சொதப்பலாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் அவர் தேர்ந்தெடுத்த திரைப்படம் தான் `வீர தீர சூரன் பாகம் 2`. இப்படத்தை எஸ் யு அருண் குமார் இயக்கியுள்ளார்.
இதில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க, எஸ் ஜே சூர்யா, சூரஜ், பிருத்வி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹெச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ள இந்த படம் சில பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக நேற்று காலை ரிலீஸ் ஆகவில்லை. எல்லா பிரச்சனைகளையும் சரி செய்துவிட்டு மாலையில் தான் வெளியானது. படம் எப்படி இருக்கு? விக்ரமுக்கு இந்த முறையாவது ஹிட் கிடைத்ததா? என்பதை பார்க்கலாம்.
கதை:
பெரியவர், ரவி(பிருத்வி) வீட்டுக்கு ஒரு பெண் வருகிறார். தன் கணவர் காணவில்லை என்றும், நீங்களே கடத்திவிட்டீர்கள் என்றும் அவர்களுடன் சண்டை போடுகிறார். இதனால் பெரியவரின் மகன் கண்ணன்(சூரஜ்) அவளை அடிக்கிறான். சிறிது நேரத்தில் அவள் காணாமல் போகிறாள். பின்னர் அந்த பெண்ணின் கணவன் எஸ்பி(எஸ் ஜே சூர்யா)விடம் செல்கிறான். தன் மனைவியை காணவில்லை என்றும், பெரியவர் வீட்டுக்கு சென்றாள் என்றும் சொல்கிறான்.
இதை சாதகமாக பயன்படுத்தி எஸ்பி.. பெரியவர் மற்றும் கண்ணனை என்கவுண்டர் செய்ய பிளான் செய்கிறான். இந்த விஷயம் பெரியவர் மற்றும் கண்ணனுக்கு தெரிகிறது. அந்த நேரத்தில் காளி(விக்ரம்)யை அழைக்க வேண்டியதாகிறது. காளி கடந்த காலத்தில் அடிதடி என இருந்துவிட்டு பின்னர் அதையெல்லாம் விட்டுவிட்டு வேறொரு ஊரில் மளிகை கடை நடத்தி மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறான்.
பெரியவர் காளியிடம் சென்று தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும், கண்ணன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டு காலில் விழுகிறார். மனைவி கலைவாணி (துஷாரா விஜயன்) வேண்டாம் என்று தடுத்தாலும் பெரியவருக்காக எஸ்பியை கொல்ல புறப்படுகிறார் காளி. எஸ்பியை காளி கொன்றாரா? காளி கடந்த காலம் என்ன? காளிக்கும், பெரியவருக்கும் என்ன சம்பந்தம்? எஸ்பி ஆடிய கேமில் பெரியவர், கண்ணன் கொடுத்த ட்விஸ்ட் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
இதையும் படியுங்கள்... லேட்டா ரிலீஸ் ஆனாலும் வசூலில் எம்புரானை ஓவர்டேக் செய்த வீர தீர சூரன் பாகம் 2!
விமர்சனம்:
சமீப காலமாக அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றன. மாஸ் கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து இன்ட்ரஸ்டிங்காக, எங்கேஜிங்காக, ட்விஸ்ட், டர்ன், எலிவேஷன்களுடன் திரைக்கு கொண்டு வந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படமும் லேட்டஸ்டாக இணைந்துள்ளது. இந்த படம் சில நேரங்களில் கார்த்தி `கைதி`யை நினைவூட்டுகிறது.
ஒரு நாள் இரவில் நடக்கும் கதை. ஒரே இரவில் போலீசார் பெரியவர் மற்றும் அவர் மகன் கண்ணனை கொல்ல பிளான் செய்ய, எஸ்பியை கொல்ல பெரியவரும் கண்ணனும் திட்டமிடுகிறார்கள். இரவிலேயே கதையை முடிக்க புறப்படுகிறான் காளி. இவர்கள் போடும் ஸ்கெட்சுகளின் தொகுப்பு, ஒருவரிடம் இருந்து ஒருவர் தப்பிக்க செய்யும் முயற்சிகள், அவர்களை கொன்றுவிட காளி படும் கஷ்டம் இந்த வரிசையில் நடக்கும் சம்பவங்களே இந்த படத்தின் கதை.
ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் இதில் திரைக்கதை தான் முக்கிய பங்காற்றி உள்ளது. அதை திறம்பட கையாண்டுள்ளார் இயக்குனர் அருண் குமார். எதிர்பாரா ட்விஸ்டுகள் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளன. ஒரு சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது அதை தவிர்த்திருக்கலாம். அதேபோல் பிளாஷ்பேக் காட்சிகள் சற்று டல் அடிக்கிறது. மற்றபடி இந்த வீர தீர சூரன் தூள் கிளப்பி இருக்கிறான்.
நடிகர்கள்:
காளி கதாபாத்திரத்தில் விக்ரம் அசத்தியுள்ளார். தன்னுடைய நடிப்பால் கவர்ந்துள்ளார். காளி கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். தேவையான எலிவேஷன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் நடிகராக அவர் தூள் கிளப்பியுள்ளார் என்று சொல்லலாம். அவர் மனைவி கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கண்ணன் கதாபாத்திரத்தில் சூரஜ் நன்றாக நடித்துள்ளார். படத்தில் ஹைலைட் ஆன கதாபாத்திரம் அவருடையது. கலக்கி இருக்கிறார். பெரியவர் ரவி கதாபாத்திரத்தில் பிருத்வியின் நடிப்பும் கவர்ந்துள்ளது. நமக்கு அவர் காமெடியனாக தெரியும். ஆனால் வில்லத்தனத்தில் மிரள வைத்திருக்கிறார். எஸ்பியாக எஸ் ஜே சூர்யா இந்த படத்திற்கு மற்றொரு பெரிய பலம். அவர் செய்த ரகளை வேற லெவல் என்று சொல்லலாம்.
டெக்னீஷியன்கள்:
டெக்னிக்கலாகவும் இப்படம் நன்றாக இருக்கிறது. முக்கியமாக தேனி ஈஸ்வர் கேமரா ஒர்க் வேற லெவல். நன்றாக காட்சிப்படுத்தி உள்ளார். பிரசன்னா ஜிகே எடிட்டிங் இன்னும் கத்தரிக்கு வேலை கொடுத்திருக்கலாம். ஒரு சில இடங்களில் ஸ்லோவாக நகர்கிறது. அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். ஜிவி பிரகாஷ் இசை படத்திற்கு வலு சேர்த்துள்ளது. ரொம்ப லவுடாக போகாமல் த்ரில்லர் மிக்ஸ் செய்து அவர் கொடுத்த மியூசிக் சூப்பராக இருக்கிறது.
இயக்குனர் அருண்குமார் இந்த படத்தை இரண்டு பாகங்களாக கொண்டு வர திட்டமிட்டு தற்போது இரண்டாவது பாகத்தை முதலில் ரிலீஸ் செய்துள்ளார். அவரின் திரைக்கதை ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் என்ன இருக்கும் என்கிற எதிர்பார்ப்பையும் தூண்டி வெற்றி கண்டிருக்கிறார். மொத்தத்தில் வீர தீர சூரன் பாகம் 2 விக்ரமின் கம்பேக் படமாக அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... சியான் விக்ரம் நடிப்பில் வெளியான 'வீர தீர சூரன் 2' சூப்பரா? சுமாரா? ட்விட்டர் விமர்சனம்!