திருநெல்வேலியில் இருக்கும் ஒரு போலீஸ் அகாடமியில் காவலர் பயிற்சிக்காக வருகிறார் விக்ரம் பிரபு. மகனை எப்படியாவது போலீஸ் ஆக்கிவிட வேண்டும் என்கிற தனது தந்தையில் ஆசையை நிறைவேற்றவே இந்த அகாடமியில் சேர்கிறார் நாயகன். அங்கு பயிற்சி கொடுக்கும் அதிகாரியாக இருக்கும் லாலுக்கும் விக்ரம் பிரபுவுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
என்னை மீறி நீ எப்படி போலீஸ் ஆகுறேனு பாக்குறேன் என மிரட்டும் லால், விக்ரம் பிரபுவுக்கு பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வருகிறார். லாலின் மிரட்டலை மீறி விக்ரம் பிரபு போலீஸ் பயிற்சியை முடித்தாரா? மகன் போலீஸ் ஆக வேண்டும் என்கிற தனது தந்தையின் கனவை நினவாக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் விக்ரம் பிரபு, கதாபாத்திரத்தின் முக்கியத்தும் உணர்ந்து திறம்பட நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்த மெனக்கெடல்கள் காட்சிகளில் பிரதிபலிக்கிறது. காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் மாணவராகவே தன்னை மெருகேற்றி, உடல்தோற்றத்தையும் மாற்றி நடித்து கைதட்டல்களை பெற்றிருக்கிறார் விக்ரம் பிரபு.
நாயகி அஞ்சலி நாயர், இயல்பான நடிப்பாலும், அழகாலும் கவர்கிறார். ஹீரோவுக்கு அடுத்து படத்தில் முக்கியத்தும் உள்ள கதாபாத்திரம் என்றால் அது நடிகர் லால் உடையது தான். கம்பீரமான நடை, மிடுக்கான தோற்றத்துடன் வரும் அவர் ஆணவம் மிகுந்த அதிகாரியாக மிரட்டி இருக்கிறார். அவரை பார்த்தால் நமக்கே பயம் வந்துவிடும் போல, அந்த அளவுக்கு வில்லத்தனத்தை காட்டி கைதட்டல்களை பெற்றுள்ளார்.
இயக்குனர் தமிழ், தமிழ் சினிமாவில் இதுவரை போலீஸை மையப்படுத்தி ஏராளமான படங்கள் வந்தாலும், அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை கையிலெடுத்துள்ளது சிறப்பு. இப்படத்தின் மிகப்பெரிய பலம் கதாபாத்திர தேர்வு தான், அதனை நேர்த்தியாக இயக்குனர் கையாண்டுள்ள விதம் அருமை.
இயக்குனர் தமிழ், காவலராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பதால், போலீஸ் அகாடமியில் நடக்கும் பயிற்சி முறைகள், அங்குள்ள அதிகாரிகள் செய்யும் அரசியல்கள் என அனைத்தையும் தோலுரித்துக் காட்டி உள்ளார். இடைவெளி வரை எதிர்பாராத திருப்பங்களுடன் பிரம்மிப்பை ஏற்படுத்திய இயக்குனர், 2-ம் பாதியில் யூகிக்கும் படியான காட்சிகளை வைத்திருப்பது படத்திற்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது. மற்றபடி படம் வேறலெவல் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
ஜிப்ரானின் இசையும், மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. ஜிப்ரானின் இசையில் ஒரே ஒரு பாடல் தான் என்றாலும், பின்னணி இசையில் மாஸ் காட்டி உள்ளார். இவரது இசை படத்தோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது. அதேபோல் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும் அட்டகாசம், ஒரே போலீஸ் அகாடமியை சுற்றி முழு படமும் நகர்ந்தாலும், அதனை விதவிதமாக காட்சிப்படுத்தி கவனிக்க வைத்துள்ளார். ஆகமொத்தம் ‘டாணாக்காரன்’ விருதுகளுக்கு சொந்தக்காரன் என்றே சொல்லலாம்.