Kaathuvaakula Rendu Kaadhal Review : ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? - முழு விமர்சனம்

First Published | Apr 28, 2022, 8:27 AM IST

Kaathuvaakula Rendu Kaadhal Review : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் விமர்சனம்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் ரேம்போ எனும் துரதிர்ஷ்டசாலி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. வாழ்க்கையில் அவர் எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காது. உதாரணத்துக்கு அவர் பிறந்ததுமே அவரது தந்தை இறந்துவிடுகிறார், தாயும் படுத்த படுக்கையாகிவிடுகிறார். இன்னும் சொல்லப்போனால் மழை பெய்யும் போது அவர் வெளியே போனால் மழையே நின்றுவிடும் அந்த அளவுக்கு துரதிர்ஷ்டசாலியாக இருக்கிறார்.

இவர் இரண்டு வேலை செய்து வருகிறார். காலையில் கால் டாக்ஸி டிரைவராகவும், இரவில் பப்பில் பவுன்சராகவும் வேலை பார்த்து வருகிறார். இந்த சமயத்தில் கால் டாக்ஸி ஓட்டும் போது நயன்தாரா உடன் பழக்கம் ஏற்படுகிறது. இது நாளடைவில் காதலாக மாறுகிறது. அதேபோல் பவுன்சராக வேலை பார்க்கும் போது பப்பில் சமந்தா மீது காதல் வயப்படுகிறார்.

இதில் இருவரையும் காதலித்து வரும் விஜய் சேதுபதி இறுதியில் யாரை திருமணம் செய்தார்? துரதிர்ஷ்டசாலியாக இருந்தவர் அதிர்ஷ்டசாலியாக மாறினாரா? இல்லையா? என்பதை நகைச்சுவையுடன் சொல்லி உள்ள படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.

Tap to resize

நாயகன் விஜய் சேதுபதி, வழக்கமான நக்கல் நையாண்டியுடன் நடித்து இருக்கிறார். இரண்டு பேரை காதலித்து, அவர்களை சமாளிக்கும் காட்சிகளில் இவரது நடிப்பு வேற லெவல். காதல் காட்சிகளில் கலக்கி இருந்தாலும், செண்டிமெண்ட் காட்சிகளில் கோட்டை விட்டுள்ளார் மக்கள் செல்வன்.

நாயகிகள் சமந்தா மற்றும் நயன்தாரா, படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் சமந்தா தான். கதிஜாவாக கலக்கி இருக்கிறார். நடனத்திலும் அசத்தி இருக்கிறார். அழகிலும் பளிச்சிடுகிறார். நானும் ரவுடி தான் படத்தில் பப்ளியாக இருந்த நயன்தாரா, இப்படத்தில் உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக காட்சியளிப்பது மைனஸாக உள்ளது. 

படத்தில் சூப்பராக இருப்பது சமந்தாவா? நயன்தாராவா? எனக் கேட்டால் சமந்தா தான் என ஈஸியாக சொல்லும்படி உள்ளது அவரது கதாபாத்திரம். கண்மணி ரோலில் நயன்தாராவுக்கு பதில் வேறு நடிகை நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என எண்ணும் அளவுக்கு உள்ளது நயன்தாராவின் நடிப்பு.

மற்றபடி மாறன் மற்றும் ரெடின் கிங்ஸ்லியின் காமெடி ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகி இருப்பது சற்று ஆறுதலை தருகிறது. கலா மாஸ்டர் மற்றும் ஸ்ரீசாந்துக்கு இப்படம் சிறப்பான அறிமுகமாக அமையவில்லை. இருவரின் நடிப்பும் சொதப்பல் தான். நடிகர் பிரபு அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை களமிறக்கினாலும், அதனை சரியாக கையாள முடியாமல் திணறி உள்ளது ஆங்காங்கே தெரிகிறது. திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். முதல் பாதி சற்று தொய்வை தருவது பின்னடைவு. இரண்டாம் பாதியில் ஆங்காங்கே காமெடி காட்சிகள் வருவதால் ரசிக்கும் படி உள்ளது. 

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது அனிருத்தின் இசை தான். அதுவும் இது அவருக்கு 25-வது படம் என்பதால், பின்னணி இசையிலும் கலக்கி இருக்கிறார். பாடல்கள் அனைத்தும் அரங்கம் அதிர ஆரவாரத்தை பெற்றுள்ளன. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும் அட்டகாசம். ஒவ்வொரு காட்சியும் கலர்புல்லாக, கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

மொத்தத்தில் காத்துவாக்குல கடந்து போகக்கூடிய படமாகத் தான் இது அமைந்துள்ளது.

Latest Videos

click me!