நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினருமான கோகுல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த இவர் கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இட்லி கடை திரைப்படத்தை காண சென்றிருந்தார். அப்போது படம் முடிந்து வெளியே வருபவர்களிடம் விமர்சனம் கேட்கப்பட்டது. அப்போது ரோஸ்ட் பிரதர்ஸ் என்கிற யூடியூபர்கள் படம் குறித்து தங்கள் விமர்சனத்தை கூறி வந்தனர். அவர்கள் திமுகவின் ஆதரவாளர்கள் என்கிற விமர்சனமும் பரவலாக உண்டு.
இந்த நிலையில், படம் பார்க்க வந்த விஜய் ரசிகரும், தவெக உறுப்பினருமான ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த கோகுல் என்பவர், பேட்டி கொடுத்து வந்த ரோஸ்ட் பிரதர்ஸை பார்த்து 200 ரூபாய் அடிமைகள் என விமர்சித்தார். அதற்கு அவர்கள் இத்தனை ஆண்டுகளாக திமுக நடத்திய கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததில்லை. கரூரில் ஏன் இப்படி நடந்தது என அந்த ரசிகர்களை மடக்கிப் பிடித்த ரோஸ்ட் பிரதர்ஸ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மேலே கைவைத்தால் சொருகிடுவேன் என்று மிரட்டும் தொனியில் கோகுல் பேசினார்.
தவெக உறுப்பினர் கைது
இந்த நிலையில், சென்னை ரோகினி திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம் தகராறு செய்ததாக தவெக உறுப்பினரான கோகுல் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரோஸ்ட் பிரதர்ஸ் யூடியூபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் கோகுல் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.