திரையுலகில் காலடி எடுத்து வைத்து 18 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனாலும் இன்று வரை தமிழ், தெலுங்கு சினிமாவின் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக வலம் வருகிறார் த்ரிஷா.
இரு மொழிகளிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் இன்றளவும் நாயகியாக நடித்து வருகிறார். அதேபோல் ரசிகர்களும் த்ரிஷாவை இன்று வரை தங்களது கனவு கன்னியாக தான் பார்க்கின்றனர்.
மாடலிங் உலகில் கொடி கட்டிப் பறந்து வந்த த்ரிஷா 1999ம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படம் மூலம் சிம்ரனுக்கு தோழியாக சினிமாவில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு இயக்குனர் அமீரின் இயக்கத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக “மௌனம் பேசியதே”திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம்.
கில்லி, சாமி, உனக்கு இருபது எனக்கு பதினெட்டு, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, அபியும் நானும் உள்ளிட்ட படங்கள் த்ரிஷாவின் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் அமர வைத்தது.
மாடலிங்கில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் த்ரிஷா அழகிய போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மிஸ் மெட்ராஸ், மிஸ் சேலம் ஆகிய பட்டங்களுக்கு சொந்தக்காரி.
21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் அதாவது செப்டம்பர் 30, 1999-ல் த்ரிஷா மிஸ் சென்னையாக பட்டம் வென்றார். இந்த மகிழ்ச்சியான நாளை இன்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் “3-9-1999 என் வாழ்க்கையை மாற்றிய நாள், மிஸ் சென்னை 1999” எனக்குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் புன்னகையுடன் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். த்ரிஷாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.