இளைய தளபதியில் ஆரம்பித்து தளபதி வரை விஜய்யின் அசாத்திய வெற்றியும், இமாலய சாதனைகளும் சர்வ சாதாரணமாக கிடைத்தது கிடையாது. அவருடைய கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்பது அனைவரும் அறிந்த செய்தியே.
தளபதி என ரசிகர்களால் இப்போது தலைமேல் வைத்துக் கொண்டாடப்படும் விஜய், ஆரம்ப கட்டத்தில் ஒன்றும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. அப்பாவிடம் காசு இருக்கிறது அதனால் பையனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். இந்த மூஞ்சியை எல்லாம் யார் பார்ப்பாங்க என விமர்சனங்கள் எழுந்தது.
இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய் பிரபல வார இதழ் ஒன்று விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்திற்கு ‘தேவாங்கு மாதிரி இருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தது. இப்போது எல்லாம் ஒரு நடிகரை அப்படி விமர்சித்துவிட்டால் நடப்பதே வேறு. ஆனால் அப்போது விஜய் அதற்காக எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக இருந்தார்.
தன்னுடைய உருவத்தையும், திறமையையும் கேலி செய்தவர்களுக்கு திரையில் பதிலடி கொடுத்தார். அடுத்தடுத்து தேர்தெடுத்து நடித்த கதாபாத்திரங்களால் ரசிகர்கள் மனங்களில் நிறைந்தார். எந்த வார இதழ் விஜய்யை உருவ கேலி செய்ததோ, அதே இதழில் கடந்த 2014ம் ஆண்டு நடத்திய கருத்துக் கணிப்பில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என அறிவித்தது.
விஜய்யாக இருந்த போதும் சரி தளபதியாக வளர்ந்த போதும் சரி எப்போதும் விமர்சனங்களுக்கு பதில் கூறும் பழக்கம் அவரிடம் கிடையாது. தன்னுடைய வெற்றியை திரையில் காட்டி தான் பழக்கம். அதையே அன்றும் செய்திருந்தார் விஜய்.
விஜய் கொடுத்த அந்த பதிலடியின் நினைவாக அவருடைய அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் அலுவலகத்தில் இன்றும் அந்த படத்தின் விமர்சனம் பிரேம் செய்து மாட்டப்பட்டிருக்கிறது.