சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு 2016ம் ஆண்டு அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ மருத்துவமனையில் சிறப்பு மருந்துவர்கள் குழு ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து ரஜினிகாந்த் ஆண்டு தோறும் அமெரிக்காவிற்கு உடற்பரிசோதனைக்காக சென்று வருவது வழக்கம்.
ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த ஆண்டு அவருடைய அமெரிக்க பயணம் தடைபட்டது. இடையில் அண்ணாத்த பட ஷூட்டிங்கின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த், அதன் பின்னர் நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்தார்.
தற்போது மீண்டும் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் பங்கேற்ற அவர் பெரும்பாலான காட்சிகளில் நடித்து முடித்துவிட்டார். தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்று குறைந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டார்.
இன்று அதிகாலை ரஜினி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். தற்போது கொரோனா காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது எனவே தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து தோஹா சென்று, அங்கிருந்து வேறொரு விமானம் மூலமாக அமெரிக்கா செல்கிறார். ரஜினியுடன் அவர் மனைவி லதா ரஜினிகாந்த்தும் உடன் செல்கிறார். அங்கு ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக் மருத்துவமனையில் ரஜினிகாந்த்துக்கு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன் பின்னர் தி கிரே மேன் படப்பிடிப்பிற்காக அங்கு தங்கியுள்ள மருமகன் தனுஷ், மகள் ஐஸ்வர்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் 3 வாரத்திற்கு அமெரிக்காவில் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். அதற்குள் தனுஷ் பட ஷூட்டிங் நிறைவடையும் என்றும், அதன் பின்னர் ஒட்டுமொத்த குடும்பமும் சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.