நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே... கடந்த ஒரு வருடமாக இவர்களது காதல் எப்போது திருமணத்தில் முடியும் என்பதே நயன் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிலும் நயன்தாரா 'நெற்றிக்கண்' பட ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தெரிவித்ததில் இருந்து, இவர்கள் திருமணம் குறித்த செய்திகள் அதிகம் வெளிவருவதையும் பார்க்க முடிகிறது.
சமீபத்தில் கூட நயன்தாரா தன்னுடைய திருமண தடையை நீக்குவதற்காக முதலில் மரத்தை திருமணம் செய்து கொண்ட பின்னரே, விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்வார் என செய்திகள் வெளியானது.
மேலும் பிரபலங்கள் யாரேனும் இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்து கூறினால், திருமணம் முடிவு செய்யப்பட்டு விட்டதா? என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு வந்து செல்வது உண்டு.
ஆனால் தற்போது சமந்தா, விக்கி - நயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது இவர்கள் திருமண விஷயத்திற்காக அல்ல, இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தயாரித்துள்ள 'கூழாங்கல்' திரைப்படம் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வாகி உள்ளதற்காக தான்.
இதுகுறித்து சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு பெற்றதற்கு தனது வாழ்த்தினை தெரிவித்து, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் ’கூழங்கல்’ திரைப்படக்குழுவினர் களுக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா - நயன்தாரா இருவரும் ஏற்கனவே நெருங்கிய தோழிகளாக இருக்கும் நிலையில், முதல் முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.