சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் ஸ்வேதா திவாரி. கடந்த 2011-ம் ஆண்டு நடந்த இந்நிகழ்ச்சியில் இவர் முதலிடம் பிடித்து பிக்பாஸ் டைட்டிலையும் ஜெயித்தார். இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் வெளிச்சம் காரணமாக இவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.
படங்களில் மட்டுமல்லாது வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார் ஸ்வேதா திவாரி. இவர் நடிப்பில் தற்போது ‘ஷோ ஸ்டாப்பர்’ என்கிற வெப் தொடர் தயாராகி உள்ளது. விரைவில் ரிலீசாக உள்ள இந்த வெப் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சி மத்திய பிரதேச மாநில தலைநகரான போபாலில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஸ்வேதா திவாரி, ‘என் பிரா சைஸை கடவுள் அளவிடுகிறார்’ என கூறியுள்ளார். அவர் நகைச்சுவையாக இதை கூறி இருந்தாலும் அவரின் இந்த கருத்து பூதாகரமான பிரச்சனையாக வெடித்துள்ளது. நடிகையின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நடிகை ஸ்வேதா திவாரி பேசிய வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி சர்ச்சையை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக விசாணை நடத்த போபால் காவல் ஆணையருக்கு மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா உத்தரவிட்டுள்ளார். 24 மணி நேரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் பணித்துள்ளார்.