• சினிமாவில் செமத்தியாக சாதித்தவர்கள், அதிலும் ஹீரோயின்களை கிளாமராய் நடிக்க வைத்து படமெடுப்பவர்கள் தங்களின் பெண் வாரிசை சினிமாவுக்குள் இறக்கிவிடுவது பெரிய அதிசயம். ஆனால் இயக்குநர் ஷங்கர் இதில் வித்தியாசப்பட்டு நிற்கிறார். மகள் அதிதியை சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்க, கார்த்தி ஹீரோவாக நடிக்கும் ‘விருமன்’ படத்தில் நாயகியாக்கினார். இப்போது மகன் அர்ஜித்தையும் சினிமாவுக்குள் இறக்கிவிடுகிறார்! என்று தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக ஷங்கரின் மிக முக்கிய உதவி இயக்குநரான பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் மகனை களமிறக்க ஷங்கர் நினைக்க, மகனோ அட்லீயின் படம் மூலம் ஹீரோவாக நினைக்கிறாராம்.
(மெர்சல், தெறி, பிகில் இதுல எதோட பார்ட் – 2 எடுக்கலாம் அட்லி?)
• சூர்யா சறுக்கியபோதெல்லாம் அவருக்கு அதிரடி ஹிட் கொடுத்து தூக்கிவிட்ட இயக்குநர் ஹரி. ஆனால் சமீப காலமாக இருவருக்குள்ளும் சில மனக்கசப்புகள். அதற்கு பல காரணங்கள் கூறபட்டாலும் கூட, ஹரி வெளிப்படையான இந்து சமய ஆதரவாளர். ஆனால் சூர்யாவோ கடந்த சில காலமாக இந்து மதத்தின் மீது வெளிப்படையாகவே விமர்சனங்களை வைப்பவராக இருக்கிறார். அதுவும் தேவையின்றி அதை செய்கிறார்! எனும் பெயரும் உள்ளது. இதனாலேயே அவரை ஹரி அவாய்டு செய்ய துவங்கினாராம். இந்நிலையில் இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க துடித்த ஒரு தயாரிப்பு நிறுவனம், அதில் பாதி கிணறு தாண்டிவிட்டது. ஹரி ஓ.கே. சொல்லிட்டார், ஆனால் சூர்யா பதில் இன்னும் வரலை.
( ரெண்டு பேரும் சேர்ந்தால் சிங்கம் சீரீஸ் வேணாம் பாஸ். ஆறு! சீக்வெல் எடுங்க. த்ரிஷாவ பார்த்து நாளாச்சு)
• இரண்டு பாகங்கள் என்று அறிவிக்கப்பட்டு பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய புஷ்பா படத்தின் முதல் பாகம் ரிலீஸாகி, செமத்தியாக வசூலை அள்ளியது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு படம் ஆஹா ஓஹோ ஈர்ப்பாக இல்லை! ஓ.கே. ஓ.கே. ரகம்தான்! என்று ஒரு விமர்சனம் கிளம்பிய நிலையில், இதன் இரண்டாம் பாகம் வெளியாகுமா? என்பது கேள்விக் குறியாக மாறியது. இந்நிலையில், இயக்குநர் சுகுமார் இதில் டல்லடிக்க, ஹீரோ அல்லு அர்ஜூனோ ‘கண்டிப்பாக ரெண்டாம் பாகம் வரவேண்டும்’ என்கிறாராம்.
(ஆமாம் பாஸு அதிலேயும் ராஷ்மிகா வேணும், சமந்தாவின் அயிட்டம் பாட்டும் வேணும்)
• சினிமாவில் சதாய்த்த கமல், அடுத்து அரசியலுக்குள் நுழைந்தார். அதில் வெற்றியா அல்லது தோல்வியா என தெரியாமல் போய்க் கொண்டிருக்கும் நிலையில், மனுஷன் அடுத்து ஒரு ஃபீல்டுக்குள் நுழைந்திருக்கிறார். அது, அமெரிக்காவின் சிகாகோ நகரில் கதர் ஆடை தொடர்பான தொழில் ஒன்றை துவக்கியுள்ளார். இந்திய குடியரசு தினமான இன்று முதல் இதன் விற்பனை துவங்கியுள்ளது ஆன்லைனில்.